துபாய் டூட்டி ஃப்ரீ இந்த ஆண்டின் இறுதி இரண்டு மாதங்களில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது அக்டோபர் மாத விற்பனையில் இதுவரை இல்லாத அளவுக்கு 805.6 மில்லியன் AED (US$220.7 மில்லியன்) விற்பனையை அறிவித்துள்ளது மற்றும் இந்த ஆண்டின் பத்து மாதங்களில் இது எட்டாவது சாதனை மாதமாகும்.
2025 ஆம் ஆண்டில் சாதனை படைத்த எட்டு மாதங்களில் முதலிடத்தில் உள்ள அக்டோபர் மாத விற்பனை, 2023 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் பதிவான முந்தைய சாதனையான AED692 மில்லியன் (US$189 மில்லியன்) ஐ விட அதிகமாகும், இது துபாய் டூட்டி ஃப்ரீ செயல்பாட்டின் நிலையான வளர்ச்சி வேகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் 2024 டிசம்பரில் எட்டப்பட்ட AED821.4 மில்லியன் (US$225 மில்லியன்) சாதனையைத் தொடர்ந்து, துபாய் டூட்டி ஃப்ரீயின் வரலாற்றில் அக்டோபர் மாதம் மூன்றாவது மிக உயர்ந்த மாதாந்திர விற்பனையையும் பதிவு செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த துபாய் டூட்டி ஃப்ரீயின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் சிடாம்பி, “எங்கள் செயல்பாட்டிற்கு அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு எங்கள் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூமுக்கு மிக்க நன்றி. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அசாதாரண கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக துபாய் டூட்டி ஃப்ரீ குழுவினருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
துபாய் டூட்டி ஃப்ரீ விற்பனையாளரின் அதிகம் விற்பனையான வகைப் பட்டியலில், அக்டோபரில் AED139.9 மில்லியன் (US$38.3 மில்லியன்) விற்பனையுடன் வாசனை திரவியங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதற்கு அடுத்ததாக தங்கம் AED97.2 மில்லியன் (US$26.6 மில்லியன்) விற்பனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் அக்டோபர் மாத விற்பனை பட்டியலில் வலுவான பங்களிப்பை வழங்கியதில் மதுபான விற்பனையும் அடங்கும், அதாவது AED96.7 மில்லியன் (US$26.5 மில்லியன்) விற்பனையுடன் மதுபானம் மூன்றாமிடத்தையும், தொடர்ச்சியான வெற்றியால் AED78 மில்லியன் (US$21.4 மில்லியன்) விற்பனையுடன் “துபாய் சாக்லேட்” நான்காமிடத்தையும் பிடித்துள்ளது. கூடவே, AED74 மில்லியன் (US$20.3 மில்லியன்) விற்பனையுடன் சிகரெட் விற்பனை ஐந்தாவது இடத்தை பதிவு செய்துள்ளது.
இதன் மொத்த விற்பனையில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கான விற்பனை அனைத்தும் 20% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. மேலும் ரஷ்யா 14.2% அதிகரிப்பையும், ஆப்பிரிக்கா 18.5% அதிகரிப்பையும் கண்டுள்ளது. ஆயினும், முக்கிய பிராந்தியங்களில் ஒன்றான இந்திய-துணைக் கண்டத்தின் பயணிகளுக்கான விற்பனை 6.62% எனும் மிகக் குறைந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel