UAE லாட்டரியின் வரலாற்றில் முதன்முறையாக, ஒரு இந்தியர் 100 மில்லியன் திர்ஹம்ஸ் (240 கோடி ரூபாய் ) என்ற மிகப்பெரிய ஜாக்பாட் பரிசை கடந்த சில நாட்களுக்கு முன் வென்றிருந்தார். அபுதாபியில் வசிக்கும் 29 வயதான இந்தியர் அனில்குமார் பொல்லா, அக்டோபர் 18, 2025 சனிக்கிழமை நடைபெற்ற தி UAE லாட்டரியின் 23வது லக்கி டே டிரா #251018 இல் 100 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசை வென்ற வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஐடி நிபுணரான இவர், மிகப்பெரிய பரிசை வென்ற போதிலும் தொடர்ந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், குறைந்தது அடுத்த பத்தாண்டுகளாவது அமீரகத்தில் வசிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்க்கையை மாற்றும் வெற்றிக்குப் பிறகு சில வாரங்களுக்குப் பிறகு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த வெற்றி எனக்கு எதிர்காலத்திற்காக முதலீடு செய்யவும் கவனமாக திட்டமிடவும் வாய்ப்பளிக்கிறது. குறைந்தது அடுத்த 10 ஆண்டுகளுக்கு நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க விரும்புகிறேன்” என்று தனது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அனில்குமார், அமீரகத்திற்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டவர்களைப் போலவே, தனது குடும்பத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க சுமார் 18 மாதங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அபுதாபிக்கு குடிபெயர்ந்ததாகவும், இப்போது, அவரது பெற்றோரையும் சகோதரரையும் அமீரகத்திற்கு அழைத்து வருவதே அவரது முதன்மையான திட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் பாதுகாப்பான நாடு, இங்கு என் வாழ்க்கையை கட்டியெழுப்புவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், எனது பெற்றோரும் சகோதரரும் இங்கு நான் அனுபவிக்கும் வாழ்க்கையை அனுபவித்து எனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் வீட்டிற்கு விமானத்தில் திரும்பிச் சென்று நற்செய்தியை அவர்களிடம் நேரில் சொல்ல விரும்புகிறேன், என் அம்மா மகிழ்ச்சியில் கண்ணீர் விடுவார் என்று எனக்குத் தெரியும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
100 மில்லியன் திர்ஹம் ஜாக்பாட், ஐக்கிய அரபு அமீரகத்தின் லாட்டரி வரலாற்றில் மிகப்பெரியது, அந்த டிராவிற்கு அவர் வாங்கிய 12 டிக்கெட்டுகளில் ஒன்றிலிருந்து ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
புதிதாக கிடைத்த பணம் இருந்தபோதிலும், அனில்குமார் பொறுப்பற்ற முறையில் செலவு செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகர்களை ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாகவும் யாஸ் ஐலாண்ட் அல்லது சாதியத் ஐலாண்டில் ஒரு வீட்டை வாங்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், ஒரு சக ஊழியருடன் ஐடி ஆலோசனை வணிகத்தை தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.
“எனக்கு எப்போதும் ஒரு சூப்பர் கார் வேண்டும் என்று ஆசை. எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் விரைவில் அதை வாங்குவேன். பின்னர் இந்த தருணத்தை ஒரு சிறந்த ரிசார்ட் அல்லது ஏழு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாட விரும்புகிறேன், சிறிது காலம் இந்த சூழ்நிலையை அனுபவிக்க விரும்புகிறேன். பின்னர் இந்த முதலீட்டைத் திட்டமிடத் தொடங்க வேண்டும்” என்றும் அவரது யோசனையைப் பகிர்ந்து கொண்டார்.
அதுமட்டுமின்றி, “நான் பணத்தின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளேன், இந்த ஆசீர்வாதம் அதிர்ஷ்டத்தின் மூலம் வந்தது, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel