வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட் நிதியை துபாய் அறிவித்துள்ளது, துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் 2026–2028 ஆம் ஆண்டிற்கான சுமார் 302.7 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள மூன்று ஆண்டு நிதித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, ஷேக் முகமது 2026ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அங்கீகரித்ததாகவும், இதில் 99.5 பில்லியன் திர்ஹம்ஸ் செலவு மற்றும் 107.7 பில்லியன் திர்ஹம்ஸ் வருவாய் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி ஸ்திரத்தன்மையை ஆதரிக்க 5 பில்லியன் திர்ஹம்ஸ் பொது இருப்பு உள்ளதாகவும் அரசாங்கத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் நிதியானது முக்கிய துறைகளில் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:
- உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம்: 48%
- சமூக மேம்பாடு (சுகாதாரம், கல்வி, சமூக சேவைகள்): 28%
- பாதுகாப்பு, நீதி மற்றும் பொது பாதுகாப்பு: 18%
- அரசு மேம்பாடு மற்றும் புதுமை: 6%
இது குறித்து துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அவர்கள் கூறுகையில், புதிய பட்ஜெட், வளர்ச்சியை விரைவுபடுத்துதல், பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்குதல் என்ற எமிரேட்டின் நீண்டகால உத்தியை பிரதிபலிக்கிறது, இது அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உலகின் முதல் மூன்று உலகளாவிய நகரங்களில் ஒன்றாக துபாயை நிலைநிறுத்துகிறது என்று கூறியுள்ளார்.
இந்த நிதித் திட்டம் லட்சிய வளர்ச்சி இலக்குகள் மற்றும் நிலையான பொருளாதார மேலாண்மை ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துகிறது, இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் துபாயின் உலகளாவிய போட்டித்தன்மையை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை உறுதி செய்கிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel