துபாய் வாகன ஓட்டிகள் விரைவில் பெரும் போக்குவரத்து மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் துபாய் வேர்ல்டு டிரேட் சென்டர் (DWTC) ரவுண்டானா மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டம் ஜனவரி 2026 இல் திறக்கப்படும் என்று துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மதிப்பாய்வு செய்த புதுப்பிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 40% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இந்தத் திட்டத்தில் 2வது டிசம்பர் ஸ்ட்ரீட்டிலிருந்து (2nd december street) அல் மஜ்லிஸ் ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட் நோக்கி போக்குவரத்தை கொண்டு செல்லும் இரண்டு புதிய பாலங்கள் அடங்கும் என்றும், இது துபாயின் மிகப்பெரிய சாலை மேம்பாடுகளில் ஒன்றின் முதல் மைல்கல்லைக் குறிக்கிறது எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் DWTC ரவுண்டானா ஷேக் சையத் சாலையை ஐந்து முக்கிய தெருக்களுடன் இணைக்கிறது. அவை
- ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட்
- ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட்
- 2வது டிசம்பர் ஸ்ட்ரீட்
- ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட்
- அல் மஜ்லிஸ் ஸ்ட்ரீட்
மேலும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக புகழ்பெற்ற DWTC ரவுண்டானா இன்டர்செக்ஷனாக மாற்றப்பட உள்ளது, இதில் கூடுதலாக 5,000 மீட்டர் நீளமுள்ள ஐந்து பாலங்கள் கட்டப்படும் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஷேக் ஹம்தான் கட்டுமான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து பின்வரும் அட்டவணையை அறிவித்துள்ளார். அவை:
- ஜனவரி 2026: 2nd டிசம்பர் ஸ்ட்ரீட் முதல் அல் மஜ்லிஸ் ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட் நோக்கி இரண்டு பாலங்கள்
- மார்ச் 2026: ஷேக் சையத் சாலையை ஷேக் கலீஃபா பின் சயீத் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் பாலம்
- அக்டோபர் 2026: ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட் மற்றும் அல் மஜ்லிஸ் ஸ்ட்ரீட்டிலிருந்து 2வது டிசம்பர் ஸ்ட்ரீட் வரை போக்குவரத்திற்கு சேவை செய்யும் இரண்டு கூடுதல் பாலங்கள்
இந்த திட்டம் முடிந்ததும், இண்டர்செக்ஷனின் போக்குவரத்துத் திறன் இரட்டிப்பாகும், சராசரி தாமதங்கள் 12 நிமிடங்களிலிருந்து வெறும் 90 வினாடிகளாக குறையும், மேலும் ஷேக் சையத் சாலையிலிருந்து ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட்டுக்கான பயண நேரம் ஆறு நிமிடங்களிலிருந்து 1 நிமிடமாக குறையும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட் மேம்பாடு
ஷேக் ஹம்தான் 2027 இல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டம் பல பயன்களை தரும் என கூறப்படுகின்றது. இந்த மேம்படுத்தல் சாலையை ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகளிலிருந்து நான்கு பாதைகளாக விரிவுபடுத்தும் என்றும் மணிநேர திறனை 6,600 இலிருந்து 8,800 வாகனங்களாக அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரசபையின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் பயண நேரத்தை 13 நிமிடங்களிலிருந்து வெறும் ஆறு நிமிடங்களாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1.3 பில்லியன் திர்ஹம் முதலீடு
DWTC மற்றும் அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட் ஆகிய இரண்டு திட்டங்களின் கீழ், மொத்தம் 1.3 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் 6,500 மீட்டர் நீளமுள்ள ஏழு பாலங்கள் மற்றும் மூன்று சுரங்கப்பாதைகள் கட்டப்படுகின்றன. அவை பின்வரும் முக்கிய மாவட்டங்களுக்கு நேரடியாக சேவை செய்யும், அவற்றுள்:
- துபாய் வேர்ல்டு டிரேட் சென்டர்
- துபாய் இன்டர்நேஷனல் ஃபினான்ஷியல் (DIFC)
- எமிரேட்ஸ் டவர்ஸ்
- மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர்
- துபாய் சிட்டி சென்டர்
எனவே, இந்த மேம்பாடுகள் மூலம், மொத்த பயண நேரம் 75% ஆகக் குறையும் எனவும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயனடைவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
RTA-வின் விரிவடையும் சாலை வலையமைப்பு
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இயக்குநர் ஜெனரல் மட்டார் அல் தாயர், துபாயின் சாலை வலையமைப்பு இப்போது 25,000 பாதை-கிலோமீட்டர் வரை பரவியுள்ளது, இது தினசரி 3.5 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு சேவை செய்கிறது. மேலும், RTA ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 829 பாதை-கிலோமீட்டர் புதிய சாலைகளை உருவாக்குகிறது, இது உலக சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என்று எடுத்துரைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், போக்குவரத்து திட்டங்கள் சுற்றியுள்ள சொத்து மதிப்புகளை 6% முதல் 16% வரை உயர்த்தியுள்ளன என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2025 மற்றும் 2027 க்கு இடையில், எமிரேட் முழுவதும் உயர் வளர்ச்சி மேம்பாட்டு மண்டலங்களை இலக்காகக் கொண்டு 35 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள 72 புதிய திட்டங்களை வழங்க RTA திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel