ADVERTISEMENT

UAE, இந்தியா இடையே இயல்பு நிலைக்கு திரும்பும் இண்டிகோ விமான சேவைகள்..

Published: 8 Dec 2025, 9:59 AM |
Updated: 8 Dec 2025, 9:59 AM |
Posted By: admin

விமான சேவை இடையூறுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான நிறுவனம் பல சிக்கல்களை சந்தித்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான இண்டிகோ சேவைகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன என கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பல விமானங்கள் புறப்பட்டு சரியான நேரத்தில் தரையிறங்கின என்றும், மற்றவை 15 முதல் 90 நிமிடங்கள் வரை தாமதத்தை சந்தித்தன என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில விமானங்கள் கிட்டத்தட்ட 10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை துபாய்-சென்னை விமானம் சரியான நேரத்தில் இயக்க திட்டமிடப்பட்டதாகவும் ராஸ் அல் கைமாவிலிருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல் அதிகாலை 2 மணிக்கு ஷார்ஜா-லக்னோ சேவையும் புறப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும், விமானப் போக்குவரத்து இடையூறுகள் ஆறாவது நாளாக தொடர்ந்த போதிலும், தற்பொழுது மீண்டும் விமான சேவைகள் சீரமைக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை செயல்திறன் 30 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விமான நிறுவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நெருக்கடி தொடங்கியது. இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) புதிய விமான கடமை நேர வரம்புகளை (FDTL) செயல்படுத்தியதால், இண்டிகோவின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விதிகளின்படி விமானிகள் வாரத்திற்கு 48 மணிநேர ஓய்வு பெற வேண்டும், மேலும் வாரத்திற்கு ஆறு இரவுகளுக்கு பதிலாக இரண்டு இரவு தரையிறக்கங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். விமான நிறுவனங்கள் அதிக ஊழியர்களை பணியமர்த்துவதற்கு அவகாசம் வழங்குவதற்காக 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதிகள், அதிகரித்து வரும் விமானி சோர்வு புகார்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விதியால் கடந்த வாரத்தில், ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் சிக்கித் தவித்ததை அடுத்து பொதுமக்களின் கோபம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து விமான நிறுவன சேவைகள் தற்பொழுது படிப்படியாக மீண்டு வர தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel