துபாயில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் கட்டாயம் 10 நாட்கள் தங்களை வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று துபாய் சுகாதார ஆணையம் (DHA) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் சோதனை முடிவில் அவர்கள் எதிர்மறை முடிவை பெற்றாலும் கூட தனிமைப்படுத்தலில் உட்படுத்திக்கொண்டு கொரோனாவிற்கான அறிகுறிகள் இருக்கா என்பதனை சுய கண்காணிப்பு செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
DHA வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “நேரடி தொடர்பில் இருந்தவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது கொரோனா வைரஸ் தொடர்புடைய ஏதேனும் அறிகுறிகளை கொண்டிருந்தால் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
DHA வழிகாட்டுதல்களின்படி, பின்வரும் வெளிப்பாடுகளைக் கொண்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
- கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் இரண்டு மீட்டர் இடைவெளிக்குள் 15 நிமிடங்களுக்கும் மேல் இருந்தவர்கள்
- கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் உடல் வழி (தொட்டு பேசுவது, நெருக்கமாக இருப்பது) தொடர்பில் இருந்தவர்கள்
- கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) பயன்படுத்தாமல் நேரடி பராமரிப்பு வழங்கியவர்கள்
- கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் ஒரே வீட்டில் வசித்தவர்கள்.