ஐக்கிய அரபு அமீரகம் தனது நாடு தழுவிய பிளாஸ்டிக் தடைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனவரி 1, 2026 அன்று செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தப்படும் நுகர்வோர் பிளாஸ்டிக் பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்படும் என்று காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MOCCAE) செவ்வாயன்று அறிவித்துள்ளது.
இந்த புதிய கட்டத்தின் கீழ், அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பல பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும். இதில் மூடிகள், தட்டுகள், கரண்டி, முட்கரண்டி, கத்தி மற்றும் சாப்ஸ்டிக்ஸ் போன்ற பாத்திரங்கள், அத்துடன் ஸ்ட்ராஸ் (straw) மற்றும் ஸ்டைரோஃபோம் (Styrofoam) மூலம் செய்யப்பட்ட உணவுப் பெட்டிகள் அல்லது கொள்கலன்கள் ஆகியவை அடங்கும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
எந்தவொரு பொருளால் செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பைகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. அவற்றின் தடிமன் 50 மைக்ரானுக்கும் குறைவாக இருந்தால், காகிதப் பைகளுக்கும் இது பொருந்தும் என்றும், இந்த நடவடிக்கைகள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விலக்குகள்
அதேசமயம், சில விலக்குகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று MOCCAE தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அனுமதி வழங்கப்படும், ஆனால் அவை ஏற்றுமதி அல்லது மறு ஏற்றுமதிக்காகத் தெளிவாகக் குறியிடப்பட்டிருக்க வேண்டும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் விற்கப்படக்கூடாது என்று கூறப்படுகின்றது.
அதேபோல், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மறுசுழற்சித் தொழிலை ஆதரித்து வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது. மருந்துப் பைகள், கழிவுகளை அகற்றும் பைகள், இறைச்சி, காய்கறிகள் மற்றும் ரொட்டி போன்ற புதிய உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் மிக மெல்லிய பிளாஸ்டிக் உறைகள், அத்துடன் ஆடை, மின்னணுப் பொருட்கள் மற்றும் பொம்மைகளுக்காக வடிவமைக்கப்பட்ட பெரிய ஷாப்பிங் பைகளுக்கும் கூடுதல் விலக்குகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குமாறும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பரந்த சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை இலக்குகளுக்கு ஆதரவளிக்குமாறும் அமைச்சகம் வணிகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை வலியுறுத்தியுள்ளது.
விரிவுபடுத்தப்பட்ட இந்தத் தடை, ஜனவரி 1, 2024 அன்று நடைமுறைக்கு வந்த திட்டத்தின் முதல் கட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்த முதல் கட்டத்தில், மக்கும் தன்மை கொண்டவை உட்பட அனைத்து வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் வர்த்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இது பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கான நாட்டின் முயற்சியில் ஒரு முக்கிய படியாக அமைந்ததாகக் கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel