ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலையற்ற வானிலை நிலவி வருவதால், பொது பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் வெளிப்புற இடங்கள் அதிகாரிகளால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை நேரங்களில் கனமழை இடியுடன் கூடிய மழையாக தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இந்த மூடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்
டிசம்பர் 18 வியாழன் மற்றும் டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை பொது பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் திறந்தவெளி சந்தைகள் மூடப்படும் என்று துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது. துபாய் சஃபாரி பூங்கா பார்வையாளர்கள் மற்றும் விலங்குகளின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
அதே போல் இன்று (டிசம்பர் 18 வியாழக்கிழமை) குளோபல் வில்லேஜ் மூடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையும் இந்த வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று குளோபல் வில்லேஜ் தெரிவித்துள்ளது.
வானிலை நிலைமையைக் கருத்தில் கொண்டு இன்று மாலை 5 மணிக்கு அல் ஷிண்டாகா அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு மூடப்பட்டது. நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், அதன்படி வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படுமா இல்லையா என்பதை முடிவு செய்யும் என்றும் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
ஷார்ஜா
ஷார்ஜா நகராட்சி, டிசம்பர் 18 வியாழன் மற்றும் டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை என இரண்டு நாட்களுக்கு எமிரேட்டில் உள்ள பொது பூங்காக்களை மூடுவதாக அறிவித்துள்ளது.
அஜ்மான்
அஜ்மானில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளதாக அஜ்மான் நகராட்சி வியாழக்கிழமை அறிவித்துள்ளது. வானிலை சீரானவுடன் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும் என்று நகராட்சி தெரிவித்துள்ளது.
ராஸ் அல் கைமா
நிலையற்ற வானிலை காரணமாக, லாம்சாத் வதனியா 2025 கண்காட்சியை (Lamsat Wataniah 2025 Exhibition) மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பதாக ராஸ் அல் கைமா பொருளாதார மேம்பாட்டுத் துறை முன்னதாக அறிவித்தது. இந்த நிகழ்விற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அது மேலும் கூறியது.
குறைந்த காற்றழுத்த அமைப்பு நிலவுவதால், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வானிலை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. இதனால் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel