ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை முதலே காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிலையற்ற வானிலை நிலவி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் எமிரேட்களில் போக்குவரத்து, அடிப்படை வசதிகள் மற்றும் அன்றாடப் பணிகள் பரவலாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
இந்நிலையில், தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), இன்று காலை 10:30 மணி வரை மேலும் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. எனவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது துபாய், ஷார்ஜா, அஜ்மான், அபுதாபி மற்றும் உம் அல் குவைன் ஆகிய நகரங்களில் காலை நேரப் பயணத்தைப் பாதித்தது.

உம் அல் குவைனில் உள்ள ஷேக் முகமது பின் சையத் சாலையின் சில பகுதிகள் உட்பட பல சாலைகளின் எக்ஸிட் வழிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் இடையே இயக்கப்படும் நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஸ் அல் கைமாவில் உள்ள ஓட்டுநர் தேர்வு மற்றும் வாகன ஆய்வு மையங்கள் மூடப்படுவதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது மட்டுமின்றி, அபுதாபியில் உள்ள அல் கதீர் பகுதியில் வசிப்பவர்கள், இரவு முழுவதும் பெய்த மழையால் வீடுகளில் நீர் கசிவு ஏற்பட்டதாகவும், மின்சாரம், வைஃபை மற்றும் ஏசி சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் புகாரளித்துள்ளனர். ஷார்ஜா மற்றும் பழைய துபாய் சுற்றுப்புறங்களின் சில பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக இதேபோன்ற புகார்கள் பதிவாகியுள்ளன.

அதேசமயம், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 19 அன்று பல எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் கொழும்பு, ஃபிராங்க்ஃபர்ட், மாலே, மஸ்கட், குவைத், பஹ்ரைன் மற்றும் பல பிராந்திய இடங்களுக்கான சேவைகளும் அடங்கும். இதனை தொடர்ந்து சாத்தியமான தாமதங்கள் காரணமாக பயணிகள் விமான நிலையைச் சரிபார்த்து, முன்கூட்டியே விமான நிலையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பள்ளிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA), பள்ளிகளை வெளிப்புற மற்றும் வளாகத்திற்கு வெளியே நடைபெறும் செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, சில குளிர்கால முகாம்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், துபாயில் உள்ள கரமா மற்றும் அல் மம்சார் போன்ற சில பகுதிகளில் வசிப்பவர்கள் காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியைக் கண்டதாகத் தெரிவித்துள்ளனர், இது படிப்படியாக நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையை அளித்தது என்றும் குறிப்பிடுகின்றனர்.

மோசமான வானிலைக்கு மத்தியில், காவல்துறை மற்றும் அவசரகாலக் குழுக்கள் தொடர்ந்து உயர் எச்சரிக்கையுடன் உள்ளன. நிலையற்ற வானிலை நாள் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் பயணங்களைக் குறைத்துக்கொள்ளவும், கவனமாக வாகனம் ஓட்டவும் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel