ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு இரவு முழுவதும் நீடித்த கனமழையைத் தொடர்ந்து, சாலைகளில் குளம்போல் தேங்கியிருக்கும் வெள்ளம் மற்றும் பாதிப்புகளின் பின்விளைவுகளைச் சமாளிக்க அதிகாரிகள் அவசரகால நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நாட்டின் சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) வானிலை படிப்படியாக மேம்பட்டு வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
ஷார்ஜாவிலும், காலை நேரத்தின் பிற்பகுதியில் வானம் தெளிவடையத் தொடங்கியது, மழையால் நனைந்த சாலைகளில் சிறிது நேரம் சூரிய ஒளி தென்பட்டதாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருபக்கம் வானிலை மேம்படுவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் கனமழையின் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது. முஹைஸ்னாவில், கனமழையால் தார் போடப்படாத வாகன நிறுத்துமிடத்தின் தரைப்பகுதி சேதமடைந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

இரவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, துபாயில் உள்ள பல முக்கியச் சாலைகள் வெள்ளிக்கிழமை காலை தற்காலிகமாக மூடப்பட்டன, இது நகரத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது.
ஷேக் சையத் சாலையில் உள்ள முதல் ஜங்ஷனுக்கு அருகிலுள்ள ஜுமைரா மற்றும் துபாய் மால் நோக்கிச் செல்லும் 50 மற்றும் 51வது எக்ஸிட் வழிகளை துபாய் காவல்துறை மூடியது. சாலைகளில் நீர் தேங்கியதால் அந்தப் பாதைகள் பாதுகாப்பற்றதாக மாறியதே இதற்குக் காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த இடையூறு வேலைக்குச் செல்வோர் மற்றும் விமான நிலையத்திற்குச் செல்வோர் ஆகியோருக்கு தாமதத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
வானிலை தொடர்பான இடையூறுகள் அமீரகம் முழுவதும் போக்குவரத்தைப் பாதித்து வருவதால், வாகன ஓட்டிகள் கூடுதல் பயண நேரத்தை ஒதுக்குமாறும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் மற்றும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், நிரம்பி வழிந்த பள்ளத்தாக்குகள் மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், துபாய் காவல்துறை மற்றும் துபாய் முனிசிபாலிட்டி குழுக்கள் போக்குவரத்து மேலாண்மை, நீர் அகற்றல் மற்றும் அவசரகால அழைப்புகளுக்குப் பதிலளித்தல் போன்ற பணிகளைத் தொடர்ந்து 24 மணி நேரமும் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகளைத் தொடர்ந்து, துபாயின் முக்கிய சாலைகள் மதியத்திற்குள் சீரடைந்ததாக RTA உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், பல பகுதிகளில் போக்குவரத்து மற்றும் சேவைகள் இன்னும் பாதிக்கப்பட்டிருந்தன. ஷார்ஜா மற்றும் அஜ்மானுக்கு இடையேயான நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், வடக்கு அமீரகங்களின் சில பகுதிகளில் வாகன ஆய்வு மையங்கள் மற்றும் ஓட்டுநர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், உம் அல் குவைனில், வானிலை தொடர்பான மூடல்கள் காரணமாக லைசென்ஸ் சேவைகள் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையற்ற வானிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஷார்ஜா நகர முனிசிபாலிட்டி டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை இறுதி வரை எமிரேட் முழுவதும் பொது பார்க்கிங் இடங்களுக்குக் கட்டணம் இல்லை என்று அறிவித்துள்ளது. இந்த விலக்கு, ஹேங்கிங் கார்டன்ஸ், அல் ஹெஃபையா லேக் மற்றும் அல் ரஃபிசா டேம் போன்ற பகுதிகள் உட்பட, கட்டணம் வசூலிக்கப்படும் அனைத்து பொது பார்க்கிங் மற்றும் ஸ்மார்ட் பார்க்கிங் வசதிகளுக்கும் பொருந்தும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கு மாறாக, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாயில் பார்க்கிங் கட்டணங்கள் ரத்து செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மோசமான வானிலை நிலவினாலும், வாகன ஓட்டிகள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் வழக்கமான வாகன நிறுத்துமிடக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
குறிப்பாக நீர் தேங்கிய அல்லது தாழ்வான பகுதிகளில் வாகனங்களை நிறுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சில குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள், குறிப்பாக அபுதாபியின் அல் கதீர் பகுதியில், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத் தடைகள் மற்றும் வீடுகளில் நீர் கசிவு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஷார்ஜாவின் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம், பாதிக்கப்பட்ட இடங்களில் சேவைகளை மீட்டெடுக்கவும் அவசரநிலைகளைக் கையாளவும் தொழில்நுட்பக் குழுக்கள் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளது.
இந்த இடையூறுகளுக்கு மத்தியில், ஷார்ஜாவில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காகப் பெரிய அளவில் மக்கள் கூடியதாகக் கூறப்படுகிறது. வீட்டிலிருந்து வேலை செய்த பல குடியிருப்பாளர்கள் தங்கள் சுற்றுப்புறங்களுக்கு அருகிலுள்ள மசூதிகளில் தொழுகை செய்தது தெரிய வந்துள்ளது. தொழுகையில் ஈடுபட்டவர்கள், மழைக்குப் பிறகு வீசிய குளிர்ந்த காற்றினால் அந்தச் சூழல் அமைதியாக இருந்ததாக விவரித்தனர்.
இதனிடையே, அதிகாரிகள் பாதுகாப்பு ஆலோசனையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தண்ணீர் தேங்கிய சாலைகளைத் தவிர்க்கவும், எச்சரிக்கையாக வாகனம் ஓட்டவும், அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளைப் பின்பற்றவும் குடியிருப்பாளர்களை வலியுறுத்துகின்றனர். நண்பகலில் நிலைமை சீராகும் அறிகுறிகளைக் காட்டிய போதிலும், நாடு முழுவதும் மீட்பு முயற்சிகள் தொடர்வதால் எச்சரிக்கை அவசியம் என்று வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel