துபாய் நகரமானது வானுயரக் கட்டிடங்கள் மற்றும் பாலங்களாலும் நெடுஞ்சாலைகளாலும் நிரம்புவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, துபாய் க்ரீக்கின் அடியில் இருந்த ஒரு சுரங்கப்பாதை, துபாய் நகரம் பயணிக்கும் விதத்தை மாற்றியது. கடந்த டிசம்பர் 19, 1975 அன்று, ஷிந்தகா சுரங்கப்பாதையானது (shindagha tunnel) துபாய் எமிரேட்டின் முதல் நீருக்கடியில் அமைக்கப்பட்ட சாலைப் பாதையாகத் திறக்கப்பட்டது, இது இப்போது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தச் சுரங்கப்பாதை, சாலை இணைப்பை மேம்படுத்தி, வேகமாக வளர்ந்து வரும் நகரத்திற்கு ஆதரவளிப்பதற்கான துபாயின் ஆரம்பகால தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சின்னமாகத் தொடர்ந்து நிற்கிறது என்பது சிறப்பிற்குரியதாகும்.
இந்தச் சுரங்கப்பாதை கட்டப்படுவதற்கு முன்பு, மக்கள் முக்கியமாக அப்ராக்கள் (Abras) எனப்படும் பாரம்பரிய எமிராட்டி படகுகள் மூலம் துபாய் க்ரீக்கைக் கடந்து, தேரா மற்றும் பர் துபாய்க்கு இடையே பயணம் செய்தனர். இந்நிலையில் 1971 இல் ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கப்பட்ட பிறகு துபாய் விரிவடைந்ததால், போக்குவரத்து அதிகரித்து, பாதைகளில் நெரிசல் ஏற்பட்டது. ஆகையால், கடல்வழிப் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் ஒரு நீண்ட காலத் தீர்வைக் கண்டறிய ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதையடுத்து, பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் பொறியாளர்கள் நீருக்கடியில் உள்ள சுரங்கப்பாதையே சிறந்த வழி என்று பரிந்துரைத்தனர். இதனையடுத்து 1970-களின் முற்பகுதியில் இதற்கான கட்டுமானம் தொடங்கியது. இது பொறியாளர்கள் க்ரீக்கின் அடிப்பகுதியில் ஒரு வறண்ட, சீல் செய்யப்பட்ட சூழலில் வேலை செய்ய அனுமதிக்கும் ஒரு மேம்பட்ட முறையைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட இந்தச் சுரங்கப்பாதை சுமார் 550 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் நான்கு போக்குவரத்துப் பாதைகளைக் கொண்டுள்ளது, மேலும் மணிக்கு 60 கி.மீ வேக வரம்புடன் வடிவமைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக, ஷிந்தகா டனல் துபாயின் சாலை நெட்வொர்க்கில் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வருகிறது, ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சுரங்கப்பதையைக் கடந்து சென்றது. பின்னர், 1980-களில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு மற்றும் வலுவூட்டும் பணிகளானது, உப்பு நீரினால் ஏற்பட்ட ஆரம்பகால தேய்மானத்தைச் சமாளிக்க உதவியது, மேலும் இந்த பணிகள் சுரங்கப்பாதையின் ஆயுட்காலத்தை எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து, 2020-களின் முற்பகுதியில், தினசரி போக்குவரத்து 55,000 வாகனங்களைத் தாண்டியது, இது அதிகாரிகளை இந்தச் சுரங்கப்பாதையை பரந்த அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைக்க வழிவகுத்தது. அடுத்ததாக, 2022ஆம் ஆண்டு நெரிசலைக் மேலும் குறைப்பதற்காக இந்த டனல் புதிய பாலங்களுடன் இணைக்கப்பட்டது, அதே நேரத்தில் இரு திசைகளிலும் போக்குவரத்திற்குத் தொடர்ந்து சேவை செய்து வருகிறது.

இந்த வழித்தடத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய இணைப்புகளில் ஒன்று இன்ஃபினிட்டி பிரிட்ஜ் ஆகும். இது இன்ஃபினிட்டி வடிவ வளைவைக் கொண்ட ஒரு நவீன அடையாளச் சின்னமாகும். இது 12 போக்குவரத்துப் பாதைகளையும், பிரத்யேக சைக்கிள் ஓட்டும் பாதையையும் கொண்டுள்ளது. இந்த பாலம் துபாய் க்ரீக்கை கடல்வழிப் போக்குவரத்திற்காகத் திறந்து வைத்திருக்கும் அதே வேளையில், போக்குவரத்து ஓட்டத்தை பெரிதும் மேம்படுத்தியுள்ளது.

திறக்கப்பட்டு அரை நூற்றாண்டுக்குப் பிறகும், இன்றளவிலும் ஷிந்தகா டனல் ஒரு சாதாரண சாலைப் பாதையை விடவும் மேலானதாகத் திகழ்கிறது. இது துபாயின் ஆரம்பகால லட்சியம் மற்றும் கவனமான திட்டமிடலுக்கு ஒரு நீடித்த நினைவூட்டலாகும், இந்த உள்கட்டமைப்பே அந்த நகரம் ஒரு உலகளாவிய மையமாக உருமாறுவதற்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel