உலகில் உள்ள பல்வேறு நாட்டவர்களும் வந்து தங்கி சொந்த தொழிலில் ஈடுபடுவதற்கோ அல்லது பணிபுரிவதற்கோ எண்ணிலடங்கா வாய்ப்புகளை தரும் நாடு ஐக்கிய அரபு அமீரகம். அதிலும் குறிப்பாக துபாயிலேயே அதிகளவிலான வணிக நடவடிக்கைகள் செயல்பட்டு வருகின்றன.
பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிக்கொண்டிருக்கும் துபாயில் கடந்த வருடம் மட்டுமே மொத்தம் 1,303 உணவு நிறுவனங்கள் புதிதாக திறக்கப்பட்டதாக தற்போதைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் படி பார்த்தால், கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று கணிக்கப்படுகின்றது.
துபாய் நகராட்சியின் உணவுத்துறை ஆய்வு பிரிவு இயக்குனர் சுல்தான் அல் தாஹர் அவர்கள் செவ்வாயன்று துபாயில் 19,259 உணவு நிறுவனங்கள் உள்ளன என்று கூறியுள்ளார். மேலும், அக்டோபரில் தொடங்கும் துபாய் எக்ஸ்போ 2020 க்கு முன்பு இது 20,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “துபாய் உலகளாவிய நற்பெயரையும் முதலீட்டாளர்களிடையே மிகுந்த நம்பிக்கையையும் கொண்டுள்ளது. மேலும், வழங்கப்படும் உணவின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒழுங்குமுறை அதிகாரிகள் மீதான நுகர்வோரின் நம்பிக்கையையும் இது பெறுகிறது. துபாயில் உள்ள உணவு பாதுகாப்பு அமைப்பு திறமையாக செயல்பட்டு வருவதால் மற்ற நாடுகளில் இருந்து வேறுபடுகிறது, இது துபாயை உணவு துறையில் உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது” என்று கூறியுள்ளார். அத்துடன் பல சர்வதேச உணவு விற்பனை நிலையங்களும் துபாயில் தங்கள் கிளைகளை திறக்க விரும்புகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கூறுகையில், “2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலின் போது, துபாய் தேவையான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தது. இதன் மூலம் உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக துபாய் தனது நிலையை வலுப்படுத்தியது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், வணிக தொடர்ச்சி மற்றும் நீடித்த தன்மையை உறுதிப்படுத்த பல்வேறு பொருளாதார நலத் திட்டங்கள் மூலம் துபாய் அரசாங்கமும் வணிகம் செய்பவர்களுக்கு பெரும் ஆதரவை வழங்கி வருகிறது என்றும் சுல்தான் அல் தாஹர் அவர்கள் தெரிவித்துள்ளார்.