ADVERTISEMENT

வீடியோ: அபுதாபி கோயிலுக்கான சிலை செதுக்கும் பணிகள் தீவிரம்..!! மார்ச் இறுதிக்குள் அமீரகம் கொண்டு வரப்படும் என தகவல்..!!

Published: 16 Jan 2021, 12:18 PM |
Updated: 16 Jan 2021, 12:22 PM |
Posted By: admin

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாட்டு மக்கள் வசிக்கும் பன்முகத்தன்மை கொண்ட நாடு ஐக்கிய அரபு அமீரகம். பல நாட்டு மக்களும் தங்களின் சொந்த நாட்டினைப் போலவே இங்கு மகிழ்ச்சியுடன் வசித்தும் வேலை பார்த்துக் கொண்டும் வணிகம் புரிந்து கொண்டும் வருகின்றனர். அதே போல் பல்வேறு நாட்டு மக்களையும் அவர்களின் பாரம்பரியத்தையும் என்றுமே போற்றக்கூடிய நாடாகவும் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பினை வழங்கும் நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் திகழ்ந்து வருகிறது.

ADVERTISEMENT

அமீரகத்தின் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு மைல்கல்லாக அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இந்துக்களுக்கென்று ஒரு பிரத்யேக இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

கடந்த 2018 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது கட்டப்பட்டு வரும் கோவிலுக்கான தனித்துவமான செதுக்கப்பட்ட சிற்பங்கள் இந்தியாவில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், அபுதாபியில் உள்ள முதல் பாரம்பரிய இந்து கோவிலின் சிலை செதுக்கும் பணிகள் இந்தியாவில் நிறைவடையும் தருவாயில் உள்ளன என்றும், இந்த கோவிலுக்காக ராஜஸ்தானில் நூற்றுக்கணக்கான சிற்பிகள் சிலை செதுக்கும் வீடியோவை கோயிலைக் கட்டமைக்கும் அமைப்பான BAPS வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

BAPS இந்து மந்திரின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “அபுதாபியில் உள்ள கோவிலுக்கு இந்தியாவில் சிலை செதுக்கும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது. இது அழகாகவும், மாறுபட்டதாகவும், கையால் செதுக்கப்பட்டதாகவும் உள்ளது. கோயிலுக்கென செதுக்கப்படும் சிலை வேலைப்பாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பண்டைய கலை மற்றும் கைவினைத்திறனை எடுத்துக்காட்டுகிறது. நூற்றுக்கணக்கான கைவினைஞர்கள் ஒரு புதிய வரலாற்றையே செதுக்குவது மட்டுமல்லாமல், பக்தி மற்றும் நல்லிணக்கத்தின் வெளிப்பாட்டை உருவாக்குகிறார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கையால் செதுக்கப்பட்ட சிற்பம் இந்தியாவின் வளமான கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பிரதிபலிக்கிறது. இதில் இந்திய காவியங்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் பிற கதைகளும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அலங்கரிக்கப்பட்ட துண்டுகள் அனைத்தும் மார்ச் இறுதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிபி வேர்ல்ட் (DP World) மற்றும் டிரான்ஸ் வேர்ல்ட் குழு (Transworld group) ஆகியவை இதற்கான ஆதரவை வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், அபுதாபியின் அபு முரேகாவில் (Abu Mureikha) கோயிலின் கட்டுமான பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும், அடித்தளம் 3 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோவில் வளாகத்தை சுற்றி வரும் நீர் அம்சங்கள், நுழைவு படிகளைச் சுற்றியுள்ள இரண்டு சிறிய நீர்வீழ்ச்சிகள், பரந்த தளத்திற்குள் ஒரு நூலகம், பூங்காக்கள், உணவு அருந்தும் கூடங்கள் மற்றும் சமூக மையம் உள்ளிட்டவைகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு திருமண மண்டபம் ஒன்றும் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலானது 2023 இல் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.