ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபிக்கு மற்ற பகுதிகளில் இருந்து வரும் நபர்கள் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டை வைத்திருந்தால் மட்டுமே அபுதாபிக்குள் நுழைய முடியும் என கடந்த வருட ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு அதன்படி தற்பொழுது வரையிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இந்த விதிமுறைகளில் சில மாற்றங்களை அபுதாபி அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான PCR அல்லது DPI நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாத இறுதி முதல் அபுதாபிக்குள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான PCR அல்லது DPI நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என கூறி கொரோனா சோதனைக்கான செல்லுபடி காலத்தை நீட்டித்தது.
மேலும், அபுதாபிக்கு வரும் நபர்கள் அபுதாபியில் தொடர்ந்து தங்க நேரிடுமானால் அவர்கள் அபுதாபிக்கு வந்த ஆறாவது நாளில் மட்டும் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்வது கட்டாயம் என்றும் அறிவித்திருந்தது. நேற்று வரை இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது மீண்டும் அபுதாபி வருவதற்கான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது சமீப காலமாக உயர்ந்து கொண்டே வருவதே இந்த விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 3,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிமுறைகளின்படி, இன்று (ஜனவரி 17 , ஞாயிற்றுக்கிழமை) முதல் அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான PCR அல்லது DPI நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நபர் அபுதாபியில் தொடர்ந்து 4 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருக்கும் போது, அபுதாபிக்குள் நுழைந்த நான்காவது நாளில் PCR சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அபுதாபியில் தொடர்ந்து 8 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருக்கும் போது, அபுதாபிக்குள் நுழைந்த எட்டாவது நாளில் மற்றுமொரு PCR சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அபுதாபிக்குள் நுழையும் நாளானது முதல் நாளாக கணக்கில் கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசிய தடுப்பூசி திட்டங்களின் ஒரு பகுதியாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் 3 ம் கட்ட மருத்துவ சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களில், அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் E அல்லது கோல்ட் ஸ்டார் (letter ‘E’ or gold star) பெற்றவர்கள் தவிர அபுதாபி குடியிருப்பாளர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது . கடைசியாக கிடைத்த தகவல்களின்படி, ஜனவரி 10 வரை சுமார் 250,000 பேர் தடுப்பூசிக்கான இரண்டாவது டோசினைப் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கான ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைத் தொடருமாறு சமூக உறுப்பினர்களை பேரிடர் மேலாண்மைக் குழு வலியுறுத்தியுள்ளது. அரசு அறிவித்திருக்கும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
The Abu Dhabi Emergency, Crisis and Disasters Committee has updated procedures to enter Abu Dhabi from within the country, effective from Sunday, 17 January, as part of the proactive efforts and precautionary measures to contain and eliminate the spread of Covid-19. pic.twitter.com/MIkfqUEDZg
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) January 16, 2021