ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் கடும் மூடு பனி நிலவி வருகிறது. குறிப்பாக அதிகாலை முதல் காலை வரை நிலவும் இந்த மூடுபனி காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்நிலையில், துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை எதிரில் உள்ள இடமே மறையும் அளவிற்கு கடுமையான மூடுபனி ஏற்பட்டது. துபாய் காவல்துறை அதிகாரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை துபாயில் ஏற்பட்ட கடுமையான பனியின் காரணமாக மூன்று மணி நேரத்திற்குள் 24 போக்குவரத்து விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
துபாய் காவல்துறையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை இயக்குனர் கலோனல் துர்கி பின் ஃபாரெஸ் அவர்கள் கூறுகையில், இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரையிலான மூன்று மணி நேரத்திற்குள் இரண்டு கடுமையான விபத்துக்கள் மற்றும் 22 சிறு விபத்துக்கள் பதிவாகியுள்ளன என்று கூறியுள்ளார். மேலும், பனிமூட்டமான வானிலையின் போது துபாய் காவல்துறைக்கு 1,810 அவசர அழைப்புகள் வந்ததாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமையை ஒப்பிடுகையில் காவல்துறைக்கு வந்த அழைப்புகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இதே குறிப்பிட்ட நேரத்தில் காவல்துறையினருக்கு 1,275 அவசர அழைப்புகள் வந்ததாகவும் ஒரு கடுமையான விபத்து உட்பட 26 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் காவல்துறையினர் அமீரகத்தின் பிற பகுதிகளுக்கு நெடுஞ்சாலைகளில் லாரிகள் செல்வதைத் தடுக்க ‘fog system’ முறையை செயல்படுத்தினர் என்று கலோனல் துர்கி பின் ஃபாரெஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிலையற்ற வானிலை காலங்களில் போக்குவரத்து வழிமுறைகளைப் பின்பற்றவும், வாகனம் ஓட்டும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும் வாகன ஓட்டிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பனிமூட்டம் அல்லது மழையின் போது ஏற்படும் போக்குவரத்து விபத்துக்கள் குறைந்த பார்வைதிறன் (poor visibility) காரணமாக மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
துபாய் காவல்துறையினர் வாகன ஓட்டிகளை எல்லா நேரங்களிலும் வாகனங்களை வேக வரம்பில் ஓட்டிக்கொள்ளவும், மெதுவாகவும், வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரத்தை வைத்திருக்கவும், மூடுபனிக்குள் வாகனம் ஓட்டும்போது ஹசார்டு லைட்ஸ் (hazard lights) மற்றும் ஹெட் பீம்ஸ் (Head Beams) போன்றவற்றை ON செய்து பாதுகாப்பாக ஓட்டுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
