ஒரு காலத்தில் விமானத்தில் பயணிக்கப் பயந்து கொண்டிருந்த துபாயில் வசித்து வரும் ஒரு வெளிநாட்டவர் இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் விமானங்களில் உலகைச் சுற்றி வருகிறார். குழந்தை பருவத்தில் விமான விபத்தில் இருந்து தப்பித்த பிறகு, பல ஆண்டுகளாக பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவர் ஒரே ஆண்டில் 140 விமானங்களில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
பதட்டம் காரணமாக விமானத்தில் பறக்க பயந்தவருக்கு, அதுவே இன்று ஆர்வமாக மாறியதுடன், உலகில் அடிக்கடி பறப்பவர்களில் ஒருவராகவும் அவரை இடம்பிடிக்க வைத்துள்ளது. அவரது இந்த மாற்றத்திற்கு துபாயும் ஒருவித காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லேஸ் லாராயா (Lays Laraya) என்ற பிரேசிலிய பெண் ஒருவருக்கு 14 வயதாக இருந்தபோது, விமானத்தில் பறப்பது என்பது அவரது வாழ்க்கையின் மிகவும் பயமுறுத்தும் அனுபவமாக மாறியது. அவரது குடும்பத்தினர் ஒரு சிறிய விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர்.
ஆனால் அந்த உணர்ச்சித் தாக்கம் பல ஆண்டுகளாக அவருக்குள் இருந்துள்ளது. அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவருக்கு விமானத்தில் பயணிப்பது என்றாலே பயம், பீதி, பதட்டத்தை உண்டாக்கியதாக லேஸ் லாராயா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சூழலில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, விருந்தோம்பல் துறையில் வேலை செய்வதற்காக பிரேசிலில் இருந்து துபாய்க்கு குடிபெயர்ந்த லராயா, காலப்போக்கில், மிக நீண்ட காலம் துபாயிலேயே தங்கிவருகிறார். அவரது துபாய் பயணம் எமிரேட்ஸ் விமானத்தில் தொடங்கியதாகவும், அந்த விமான பயணமே தனது பதட்டத்தை போக்கிய முதல் அனுபவம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நகரம் தனது வாழ்க்கையை பல வழிகளில் மாற்றியதாக கூறும் அவர், உலகின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் விரைவான இணைப்புகளுடன் இருக்கும் துபாயின் மைய இருப்பிடம், காலப்போக்கில் தனது விமானப் பயணத்தைத் தவிர்க்க முடியாததாக மாற்றியதாகவும், விமானத்தில் பறக்கும் ஆர்வத்தை அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் மட்டும், 140 விமானங்களில் பயணித்து சாதனை படைத்துள்ள அவர், பெரும்பாலான பயணிகளைப் போல விடுமுறை நாட்களில் பறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, அதே நாள் அல்லது வார இறுதி திரும்பும் பயணங்கள் உட்பட அவரது பல பயணங்கள் குறுகியவை என்றும் கூறப்படுகிறது.
நீண்ட காலமாக, பறப்பது என்பதை சித்திரவதையாக நினைத்து விமான பயணத்தை தவிர்த்து வந்த லாரா, இன்று 709 முறை பறந்துள்ளார், 3.38 மில்லியன் கிலோமீட்டருக்கு மேல் பயணித்துள்ளார், 4,538 மணிநேரம் வானத்தில் செலவிட்டுள்ளார், மேலும் 84 முறைக்கு மேல் பூமியைச் சுற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel