நாளுக்கு நாள் வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகில், நாம் பணம் செலுத்தும் முறையும் நம்மைச் சுற்றியுள்ள தொழில்நுட்பத்தைப் போலவே வேகமாக வளர்ந்து வருகிறது. பணப் பரிவர்த்தனையில் தொடங்கிய இந்த முறை, பணமில்லாப் பரிவர்த்தனைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், மொபைல் வாலெட்டுகள் மற்றும் UPI என படிப்படியாக மாற்றம் கண்டுள்ளது. இன்று, அடுத்த கட்டமாக உள்ளங்கையைக் கொண்டே பணம் செலுத்தும் முறை விரைவில் வரவிருக்கிறது.
மளிகைப் பொருட்கள் வாங்கவோ அல்லது விமானத்தில் பயணிக்கவோ உங்களிடம் மொபைல், டெபிட் கார்டு அல்லது வாலட் தேவையில்லை, அதற்கு பதிலாக உங்கள் கை மட்டும் போதும் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? அந்த எதிர்காலம் நீங்கள் நினைப்பதை விட மிக அருகில் உள்ளது. இது பணப்பைகள், கார்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் கூட தேவையில்லாத ஒரு எதிர்காலத்தை உறுதியளிக்கிறது.
உள்ளங்கையின் தனிச்சிறப்பு
ஒவ்வொரு நபரின் உள்ளங்கைக்குள் இருக்கும் நரம்புகளின் அமைப்பு முற்றிலும் தனித்துவமானது. ஒத்த இரட்டையர்களுக்குக் கூட ஒரே மாதிரியான அமைப்பு இருப்பதில்லை. இந்த நரம்புகள் தோலுக்கு அடியில் அமைந்துள்ளன, மேலும் அவற்றை அகச்சிவப்பு (NIR) ஒளியைப் பயன்படுத்தி மட்டுமே பார்க்க முடியும், இது அவற்றைப் பிரதி எடுப்பதையோ அல்லது போலியாக உருவாக்குவதையோ மிகவும் கடினமாக்குகிறது.
அப்படியான அகச்சிவப்பு (near-infrared- NIR) தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் இயக்கப்படும் உள்ளங்கை பயோமெட்ரிக்ஸ், மக்கள் பணம் செலுத்தும், பயணம் செய்யும் மற்றும் தங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும் முறைகளை அமைதியாக மாற்றி வருகிறது. ஸ்மார்ட்போன்களைப் போலவே, இந்தத் தொழில்நுட்பமும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
இது எப்படி வேலை செய்கிறது?
ஒரு சிறிய ஸ்கேனர் உங்கள் உள்ளங்கையில் அகச்சிவப்பு ஒளியைப் பாய்ச்சும். அந்த ஒளி தோலின் வழியாகச் சென்று உள்ளே உள்ள நரம்பு அமைப்பை எடுத்துக்காட்டும். இந்த அமைப்பு உடனடியாக ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் பதிவோடு பொருத்தப்படும். உங்கள் நரம்புகள் அடர் கோடுகளாகத் தோன்றி, ஒரு தனித்துவமான பயோமெட்ரிக் அடையாளத்தை உருவாக்கும். பணம் செலுத்த, உங்கள் கையை ஸ்கேனரின் மீது காட்டினால் போதும். முழு செயல்முறைக்கும் ஒரு வினாடிக்கும் குறைவாகவே ஆகும் என்று கூறப்படுகிறது.
இது ஏன் இவ்வளவு பாதுகாப்பானது?
கைரேகைகள் அல்லது முக அங்கீகாரத்தைப் போலல்லாமல், உள்ளங்கை நரம்புகள் உடலுக்குள் உள்ளன. அவற்றை புகைப்படம் எடுக்கவோ, தரவுகளில் இருந்து எடுக்கவோ அல்லது உயிருள்ள இரத்த ஓட்டம் இல்லாமல் பயன்படுத்தவோ முடியாது. இது உள்ளங்கை நரம்புத் தொழில்நுட்பத்தை இன்று கிடைக்கும் மிகவும் மோசடி-எதிர்ப்பு பயோமெட்ரிக் அமைப்புகளில் ஒன்றாக ஆக்குகிறது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது ஏற்கனவே எங்கு பயன்படுத்தப்படுகிறது?
- வீசாட் பாம் பே (சீனா): பல்பொருள் அங்காடிகள், தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. பயனர்கள் ஒருமுறை பதிவு செய்து, தங்கள் உள்ளங்கையைக் காட்டி பணம் செலுத்துகிறார்கள். 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.
- அமேசான் ஒன் (அமெரிக்கா): ஹோல் ஃபுட்ஸ் மற்றும் முக்கிய விளையாட்டு அரங்குகளில் இந்த சேவை தற்போது கிடைக்கிறது
- கஜகஸ்தான்: காஸ்பி வங்கி (Kaspi bank) பணம் செலுத்துவதற்காக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகம்: மத்திய வங்கி தற்போது உள்ளங்கை மற்றும் முக அங்கீகாரத்தை இணைக்கும் ஒரு கலப்பின அமைப்பைச் சோதனை செய்து வருகிறது.
அதேபோல், Fujitsu, Hitachi மற்றும் NEC போன்ற நிறுவனங்களும் அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் இந்தத் தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டுவர சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர் தரவு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?
இந்த அமைப்பு உங்கள் உள்ளங்கையின் படங்களைச் சேமிப்பதில்லை. மாறாக, ஸ்கேன் செய்யப்பட்ட தரவு, மீண்டும் மாற்ற முடியாத ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் குறியீடாக மாற்றப்படுகிறது. பணம் செலுத்தும் விவரங்கள் மேம்பட்ட பாதுகாப்பு வன்பொருளைப் பயன்படுத்திப் பாதுகாக்கப்படுகின்றன, அதாவது தரவு திருடப்பட்டாலும், அதைத் தவறாகப் பயன்படுத்த முடியாது.
பயனர் தரவைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள்
- நரம்புப் படங்களைக் கைப்பற்ற NIR இமேஜிங்
- சாதனத்திலேயே தரவை உடனடியாகச் செயலாக்க எட்ஜ் AI
- ஸ்கேன்களை மாற்ற முடியாத கணிதக் குறியீடுகளாக மாற்றும் பயோமெட்ரிக் டெம்ப்ளேட்டுகள்
- கட்டணத் தரவைப் பாதுகாக்க வன்பொருள் பாதுகாப்பு தொகுதிகள்
கைரேகை அடிப்படையிலான அடையாளம் காணும் இந்த முறையானது, பணப் பரிவர்த்தனையில் மட்டுமல்லாமல் விமான நிலையங்கள், பொதுப் போக்குவரத்து, இசை நிகழ்ச்சிகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் வரை விரிவடையும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். எதிர்கால அமைப்புகள் இன்னும் அதிக துல்லியத்திற்காக உள்ளங்கை, முகம் மற்றும் கருவிழி ஸ்கேன்களை இணைக்கக்கூடும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்தத் தொழில்நுட்பம் பரவும்போது, உங்கள் உள்ளங்கையைக் கொண்டு பணம் செலுத்துவது விரைவில் ஒரு டெபிட் கார்டை ஸ்வைப் செய்வது போல சாதாரணமாகவோ அல்லது அதைவிட எளிதாகவோ உணரப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel