ADVERTISEMENT

கொரோனாவிற்கு எதிராக விதிமுறைகளை கடுமையாக்கிய துபாய்..!! புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிப்பு..!!

Published: 23 Jan 2021, 2:02 PM |
Updated: 23 Jan 2021, 2:05 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 3,000 க்கும் அதிகமாகவே இருக்கின்றது. இந்நிலையில், துபாயில் கொரோனா வைரஸிலிருந்து குடியிருப்பாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்க அதிகாரிகள் பல புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

துபாய் பொருளாதார மேம்பாட்டு துறை, துபாய் நகராட்சி மற்றும் துபாய் சுற்றுலாத்துறை போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் ஆய்வாளர்கள் அனைத்து இடங்களிலும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடித்துவருவதை உறுதி செய்து வருகின்றனர்.

இந்த புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் துபாய் முழுவதும் உள்ள தனியார் கூட்டங்கள், திருமணங்கள், உணவகங்கள், ஜிம்கள் மற்றும் மருத்துவமனைகளில் அதிக சமூக இடைவெளியை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிகாரிகள் சமீபத்தில் அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்

பார்ட்டிகள், திருமணங்களில் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அனுமதி

துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணைய உச்சக் குழுவின் கூற்றுப்படி, மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணங்கள், சமூக நிகழ்வுகள் மற்றும் தனியார் பார்ட்டிகளில் கலந்து கொள்ள முடியும். அனுமதிக்கப்பட்ட விருந்தினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது வீடுகள் மற்றும் ஹோட்டல்களின் நிகழ்வுகளுக்கு பொருந்தும் என்றும் ஜனவரி 27 புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உணவகங்களில் சமூக இடைவெளி

துபாயில் உள்ள உணவகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க மூன்று மீட்டர் இடைவெளியில் மேஜைகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இரண்டு மீட்டர் இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு மேஜையில் உட்கார அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தில் இருந்து ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளது

கஃபேக்கள்

கஃபேக்களில் ஒரு மேஜைக்கு நான்கு வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் மேஜைகளுக்கு இடையிலான தூரம் மூன்று மீட்டராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்களுக்கான பாதுகாப்பு விதிகள்

துபாயில் உள்ள உடற்பயிற்சி மையங்கள் மற்றும் ஜிம்களில் பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சியாளர்களிடையே கடைபிடிக்கப்படும் சமூக இடைவெளியை 2 மீட்டரில் இருந்து 3 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு நிகழ்வுகள் ரத்து

துபாய் சுற்றுலாத்துறையானது துபாயில் வழங்கப்பட்ட அனைத்து பொழுதுபோக்கு அனுமதிகளையும் நிறுத்தியுள்ளது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் 200 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு மூன்று வாரங்களில் 20 நிறுவனங்களை மூடியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே அனுமதி

துபாயில் இருக்கக்கூடிய மருத்துவமனைகள் மற்றும் ஒரு நாள் அறுவை சிகிச்சை மையங்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு மிக முக்கியத்துவம் இல்லாத அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது பிப்ரவரி 19 வரை நீடிக்கும் என்றும் மிக அவசியமான அறுவை சிகிச்சைகளை மட்டும் மருத்துவமனைகள் மற்றும் அறுவை சிகிச்சை மையங்கள் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.