சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், வருடாந்திர புனித பயணத்திற்கான முன்கூட்டிய மற்றும் கவனமாக திட்டமிடப்பட்ட ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, 2026 ஹஜ் பருவத்திற்கான (1447 ஹிஜ்ரி) விசாக்கள் பிப்ரவரி 8 முதல் வழங்கத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, உலகம் முழுவதும் உள்ள ஹஜ் விவகார அலுவலகங்களுடன் பகிரப்பட்ட ஒரு விரிவான செயல்பாட்டுக் கால அட்டவணையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, வழிபாட்டாளர்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்பே சேவைகள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கும், நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் அமைச்சகம் எடுக்கும் முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.
2026 ஹஜ் பருவத்திற்கான ஏற்பாடுகள் முந்தைய புனித பயணம் முடிந்த உடனேயே தொடங்கப்பட்டுவிட்டன. ஜூன் 8, 2025 அன்று (12 துல் ஹஜ் 1446 ஹிஜ்ரி), அமைச்சகம் வெவ்வேறு நாடுகளில் உள்ள ஹஜ் விவகார அலுவலகங்களுக்கு ஆரம்ப திட்டமிடல் வழிகாட்டுதல்களை வெளியிட்டது, இது முன்கூட்டிய ஒருங்கிணைப்புக்கு அடித்தளமாக அமைந்தது என கூறப்படுகின்றது.
அடுத்தடுத்த மாதங்களில், அந்த அலுவலகங்களுக்கு ‘Nusk Masar’ டிஜிட்டல் தளம் மூலம் புனிதத் தலங்களில் உள்ள முகாம்கள் குறித்த விரிவான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த முன்கூட்டிய அணுகல், தங்குமிடம், தளவாடங்கள் மற்றும் கள அளவிலான சேவைகளைத் திட்டமிட அதிகாரிகளுக்கு கூடுதல் நேரத்தை வழங்கியதாகவும் அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான ஒப்பந்தப் பணிகள் 1 ரபி அல் அவ்வல் 1447 ஹிஜ்ரி அன்று தொடங்கப்படும். மேலும், அக்டோபர் 12, 2025-க்குள், ஆயத்தக் கூட்டங்கள் முடிக்கப்பட வேண்டும், செயல்பாட்டுத் தரவுகள் இறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் பங்கேற்கும் நாடுகளில் வழிபாட்டாளர்கள் பதிவு தொடங்கப்பட வேண்டும் என அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.
பின்னர், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பாடுகள் தீவிரமடையும்போது, மக்கா மற்றும் மதீனாவில் உள்ள தங்குமிடங்கள், போக்குவரத்து சேவைகள் மற்றும் புனிதத் தலங்களில் உள்ள வசதிகளுக்கான ஒப்பந்தங்கள் ஜனவரி மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. பின்னர் பிப்ரவரி 8 ஆம் தேதி விசா வழங்குதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும், அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் விசாக்களின் இறுதி செயலாக்கம் மற்றும் யாத்ரீகர்களின் தயார்நிலை தரவுகளைச் சமர்ப்பித்தல் ஆகியவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டாளர்கள் வரத் தொடங்குவதற்கு முன்பு உள்கட்டமைப்பு, தங்குமிடம் மற்றும் சேவைகள் முழுமையாக இருப்பதை உறுதிசெய்ய, காலக்கெடுவை கண்டிப்பாகப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கள அளவில் ஏற்கெனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ள நிலையில், சர்வதேச வழிபாட்டாளர்களுக்கான புனிதத் தலங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கான ஒப்பந்தங்களும், நுஸ்க் தளம் வழியாக மக்காவில் தங்குமிட ஒப்பந்தங்களும் நிறைவடைந்துவிட்டதாகவும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை, 2026 ஹஜ் பயணத்திற்காக சுமார் 750,000 பயணத்திற்காக பதிவு செய்துள்ளனர், இதில் 30,000 பேர் தங்கள் சொந்த நாடுகளிலிருந்தே நேரடியாகப் பயணத் தொகுப்புகளை முன்பதிவு செய்துள்ளனர். புனிதத் தலங்களில் சர்வதேச வழிபாடாளகளுக்காக சுமார் 485 முகாம்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் 73 ஹஜ் விவகார அலுவலகங்கள் தங்களின் அடிப்படை ஒப்பந்தத் தேவைகளை நிறைவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel