இஸ்லாமியப் பெருமக்களின் புனித மாதமான ரமலான் மாதம் நெருங்கி வருவதையொட்டி, துபாயின் பிரபலமான குளோபல் வில்லேஜ், நீட்டிக்கப்பட்ட நேரங்கள், பண்டிகை அலங்காரங்கள் மற்றும் புனித மாதத்திற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலாச்சார, உணவு மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களுடன் பார்வையாளர்களை வரவேற்கத் தயாராகி வருகிறது.
தற்போது தனது 30வது சீசனில் இயங்கி வரும் இந்த பன்முகக் கலாச்சார இலக்கு, ரமலான் மாதம் முழுவதும் ஞாயிறு முதல் புதன் வரை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், வார இறுதி நாட்களான வியாழன் முதல் சனிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் திறந்திருக்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ரமலான் மாதத்திற்காக குளோபல் வில்லேஜ் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒளிரும் விளக்குகள், இதமான சுற்றுப்புற விளக்குகள் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரத் தகுந்த அலங்காரங்கள் உட்பட பாரம்பரிய ரமலான் கருப்பொருள் கொண்ட அலங்காரங்களால் முழுவதும் மாற்றியமைக்கப்பட்டு, மாலை நேர வருகைகளுக்கு ஒரு அமைதியான மற்றும் கொண்டாட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
முல்தகா அறிமுகம்: ஒரு புதிய ரமலான் ஒன்றுகூடும் இடம்
கூடுதலாக, இந்தாண்டு ரமலான் மாதத்தில் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய, கூடார பாணியிலான இருக்கை வசதி கொண்ட முல்தகா என்ற இடத்தையும் குளோபல் வில்லேஜ் அறிமுகப்படுத்துகிறது. ஓய்வு மற்றும் உறவுகளைப் பேணுவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த இடத்தில், வசதியான இருக்கைகள், அலங்கார விளக்குகள் மற்றும் ஒரு வரவேற்கும் சூழல் ஆகியவை உள்ளன, இது இஃப்தார், சுஹூர் அல்லது இரவு நேர சந்திப்புகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
பிரதான மேடைக்கு முன்னால் அமைந்துள்ள முல்தகாவில், விருந்தினர்கள் குளோபல் வில்லேஜின் பல கடைகளில் இருந்து உணவை ருசிக்கலாம் மற்றும் அங்கிருக்கும் குழுவினரிடம் இருந்து பாரம்பரிய விளையாட்டுகளை வாடகைக்கு எடுத்து விளையாடலாம். இது குடும்பத்தினருக்கு ஏற்ற இடமாக அமைகிறது.
நேரலை ரமலான் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்கள் பிரதான மேடையில் ரமலான் கருப்பொருள் கொண்ட நேரலை நிகழ்ச்சிகளின் பிரத்யேகத் தொகுப்பை எதிர்பார்க்கலாம்.
- அப்துல்லா இஸ்மாயீல் தொகுத்து வழங்கும் அல் மந்தூஸ் நேரலை விளையாட்டு நிகழ்ச்சி, ரமலானின் முதல் வார இறுதியில் தொடங்கி, அடுத்தடுத்த மூன்று வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும்.
- மேலும், ஒரு சிறப்பு ட்ரோன் நிகழ்ச்சி, பிப்ரவரி 20, வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு வானில் ஒளிரும்.
இஃப்தார் மற்றும் சுஹூருக்கான சுவைகளின் உலகம்
அதேசமயம், உணவுப் பிரியர்கள் ரெஸ்டாரன்ட் பிளாசா, கடைகள், உணவு நிலையங்கள், அரங்குகள் மற்றும் கஃபேக்கள் முழுவதும் பரவியுள்ள 250-க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் ஒரு உலகளாவிய சமையல் பயணத்தை அனுபவிக்கலாம். மனநிறைவான இப்தார் உணவுகள் முதல் லேசான சுஹூர் உணவுகள் வரை ஏராளமான விருப்பங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் ஷாப்பிங்
எல்லாவற்றுக்கும் மேலாக, 90க்கும் மேற்பட்ட கலாச்சாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 கலாச்சார பெவிலியன்களுடன், குளோபல் வில்லேஜ் ரமலானின் போது ஒரு தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது. பார்வையாளர்கள் அலங்காரம், உடைகள், பரிசுகள், வீட்டுப் பொருட்கள், பாரம்பரிய இனிப்புகள் மற்றும் உணவு அத்தியாவசியங்களை ஆராயலாம், இது ஈத் பண்டிகை தயாரிப்புகளுக்கு வசதியான இடமாக அமைகிறது.
வெற்றியாளர்களுக்கு வெகுமதி
ரமலான் கொண்டாட்டங்களுக்கு கூடுதலாக, இந்த சீசனிலும் ‘Ramadan Step Challenge’ நடைபெறுகிறது. குளோபல் வில்லேஜ் மொபைல் அப்ளிகேஷன் மூலம் கிடைக்கும் இந்த போட்டியில், பார்வையாளர்கள் தங்கள் ஒரே வருகையில் 10,000 நடைகளை (steps) முடித்தால் அற்புதமான வெகுமதிகளை வெல்லவும் வாய்ப்பளிக்கிறது.
ஒட்டுமொத்தத்தில், நீட்டிக்கப்பட்ட நேரம், கலாச்சார நிகழ்ச்சிகள், உலகளாவிய சுவைகள் மற்றும் புதிய ரமலான்-பிரத்தியேக இடங்களுடன், குளோபல் வில்லேஜ் புனித மாதம் முழுவதும் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு மறக்கமுடியாத இரவுகளை உறுதியளிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel