ADVERTISEMENT

இனி அமீரகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை ஸ்பான்சர் செய்யலாம்..!! அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

Published: 24 Jan 2021, 2:01 PM |
Updated: 24 Jan 2021, 3:08 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 ம் ஆண்டு துவங்கியதற்கு பிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் விசா மற்றும் ரெசிடென்ஸ் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமீரகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தற்பொழுது தங்கள் குடும்ப உறுப்பினர்களை நாட்டிற்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அரபு நாடுகளிலேயே கல்விக்கான சிறந்த இடமாக கருதப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 77 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது அறிவித்துள்ள முடிவின்படி, அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு போதிய நிதித்திறன் இருந்தால் அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அமீரகத்திற்கு அழைத்து வந்து ஒன்றாக வசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட மாணவர் விசா 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது மற்றும் அந்த விசாவானது பெற்றோர் அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தால் நிதியுதவி செய்யப்படுகிறது. நீண்ட கால ரெசிடென்ஸ் திட்டம் அல்லது கோல்டன் விசாவின் கீழ், மிக திறமை வாய்ந்த மாணவர்கள் 5 வருட நீண்ட கால விசாவைப் பெற விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய சுற்றுலாத் திட்டங்களை ஒருங்கிணைத்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் ஆதரவளிக்கும் நோக்கில் அமீரகத்தில் சுற்றுலா கவுன்சில் அமைப்பதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் நாட்டின் நிதி மற்றும் வங்கித் துறைகளுக்கு ஆதரவளிக்கும் புதிய கடன் திட்டம், பல்வேறு பொருளாதாரத் துறைகளில் நீடித்த தன்மையை நிலைநிறுத்தும் ஒரு புதிய பொருளாதார கொள்கை திட்டம் ஆகியவற்றிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மாண்புமிகு ஷேக் முகம்மது அவர்கள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ச்சியாக பணியாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். தேசிய மீட்புக்கான செயல்முறை ஒருபோதும் நிறுத்தப்படாது. பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது எல்லாவற்றையும் விட முன்னுரிமையாக இருக்கும். எதிர்காலத்தை நோக்கிய வலிமையுடனும் ஆற்றலுடனும் நமது சமூகம் இந்த ஆண்டைக் கடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT