கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, துபாயைச் சேர்ந்த தொழிலதிபரும், கொடையாளருமான ஃபிரோஸ் மெர்ச்சன்ட் (Firoz Merchant) எனும் இந்தியர், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நேர்மறையாக மாற்றியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடனில் சிக்கித் தவிக்கும் கைதிகள் விடுதலையாகி சுதந்திரமாக நடமாடவும் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணையவும் உதவியுள்ளார்.
அவரின் இந்த மனிதாபிமான முயற்சிகள் மூலம், 2008 முதல் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 497 கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ரமலான் மாதத்தில் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
கைதிகளுக்கான இந்த விடுதலை முயற்சி அவரது பணியின் மையமாக இருந்தாலும், அதிகரித்து வரும் சிகிச்சை செலவுகளுடன் போராடும் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதில் தொழிலதிபர் மெர்ச்சன்ட் இப்போது தனது கவனத்தை விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விடுதலைத் திட்டம் ஆண்டு முழுவதும் இயங்குகிறது, ஆனால் ரமலானில் வேகமடைகிறது என கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் நெருக்கமாகவும், கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அறக்கட்டளையுடன் (Khalifa Bin Zayed Al Nahyan Foundation) இணைந்தும், நிதி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளின் கடன்களை அடைக்க அவர் உதவி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,972 கைதிகள் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா முழுவதும் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் நிலுவைத் தொகையை செலுத்த சுமார் 2.4 மில்லியன் திர்ஹம்ஸ் வழங்கப்பட்டது. மேலும் பல சந்தர்ப்பங்களில், வீடு திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது
இது குறித்துப் பேசுகையில், “இவர்கள் கடுமையான குற்றவாளிகள் அல்ல, பெரும்பாலானவர்கள் நிதி சிக்கலில் சிக்கியவர்கள். அவர்கள் மற்றொரு வாய்ப்புக்கு தகுதியானவர்கள்.” என்று மெர்ச்சண்ட் கூறியுள்ளார்.
புற்றுநோய் பராமரிப்பில் கவனம் செலுத்துதல்
கூடுதலாக, இவர் மருத்துவ வழக்குகளையும் ஆதரித்து வருகிறார். 2025 ஆம் ஆண்டில், 11 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் மற்றும் பிற சிகிச்சைகளுக்காக துபாய் அறக்கட்டளை சங்கம் மூலம் 1 மில்லியன் திர்ஹம்ஸ் நன்கொடை அளித்துள்ளார்.
இருப்பினும், இந்த ஆண்டு, புற்றுநோய் சிகிச்சை ஒரு முன்னுரிமையாக மாறியுள்ளது. ரமலானின் முதல் நாளில், அதிகரித்து வரும் மருத்துவக் கட்டணங்களை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு நிதி உதவி குறித்து விவாதிக்க அபுதாபியில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு சங்கத்தின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும், புற்றுநோய் சிகிச்சை, ஒரு குடும்பத்தின் சேமிப்பை விரைவாகக் குறைக்கும் என்று குறிப்பிட்ட அந்த தொழிலதிபர், இந்த ஆண்டு புற்றுநோய் சிகிச்சைக்காக 500,000 திர்ஹம் முதல் 700,000 திர்ஹம் வரை பங்களிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேவைப்பட்டால் இந்த தொகையை 1 மில்லியன் திர்ஹம் ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அவர் பேசிய போது, “தேவை அதிகமாக இருக்கும் இடத்தில் நான் இருக்கிறேன், தற்போது, சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத புற்றுநோய் நோயாளிகளும் இதில் அடங்குவர்” என்று அவர் கூறியுள்ளார்.
அமீரகம் முழுவதும் மசூதிகளைக் கட்டுதல்
மனிதாபிமான நிவாரணத்திற்கு அப்பால், நீண்டகால சமூக திட்டங்களிலும் இவர் பங்காற்றி வருகிறார். தற்போது ஏழு எமிரேட்களிலும் தலா ஒரு மசூதியைக் கட்டி வருகிறார், ஒவ்வொன்றும் 1,000 முதல் 1,200 வழிபாட்டாளர்களை தங்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் துபாயின் அல் ஃபுர்ஜானில் ஒரு புதிய மசூதிக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது, விரைவில் கட்டுமானம் தொடங்க உள்ளது என்றும் ஃபுஜைராவின் முகமது பின் சையத் சிட்டியிலும் திட்டங்கள் நடந்து வருகின்றன என்றும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் உம் அல் குவைனில் உள்ள ஒரு பழைய மசூதி ஒரு பெரிய கட்டமைப்பால் மாற்றப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இது குறித்து விவரிக்கையில், “எனக்கு இவ்வளவு கொடுத்த நாட்டிற்குத் திருப்பித் தருவது எனது வாழ்நாள் கனவாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 நாடுகளில் 150க்கும் மேற்பட்ட கடைகளை இயக்கும் ப்யூர் கோல்ட் ஜுவல்லர்ஸின் நிறுவனரான இவர் தெரிவிக்கையில் “ஒருவர் கடன் அடைக்கப்பட்டதால் விடுதலை அடைந்து வீடு திரும்பினால், அது போதும். நாங்கள் தலையிட்டதால் யாராவது மருத்துவ சிகிச்சையை பெற்றால், அது போதும், மீதி அல்லாஹ்வின் கைகளில் உள்ளது.” என்றும் கூறியுள்ளார்
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel