ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் லாட்டரி மற்றும் ராஃபிள் டிராக்களில் அதிகளவு இந்தியர்களே வெற்றி பெற்று வரும் நிலையில் தற்பொழுது புதிதாக இரண்டு இந்தியர்களுக்கு, லாட்டரியில் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
முதலாவதாக, 42 வயதான முருகானந்த் கோவிந்தன் என்பவர் UAE லாட்டரியில் தனது முதல் டிக்கெட்டை வாங்கிய பிறகு முதல் முயற்சியிலேயே இரண்டாவது பரிசான 5 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசை வென்றுள்ளார். அதிர்ஷ்ட எண்களை கொண்ட அந்த டிக்கெட்டை நெருங்கிய நண்பருடன் பகிர்ந்து கொண்ட முருகானந்த், பரிசுத் தொகையையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வார். UAE லாட்டரியின் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முதல் பரிசான 30 மில்லியன் திர்ஹம் பரிசை இன்னும் யாரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெற்றி பெற்றது குறித்து கூறுகையில் பல வருட நிதி அழுத்தத்திற்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றியை ஒரு ஆசீர்வாதமாக உணர்ந்ததாக முருகானந்த் கூறியுள்ளார். தனது குடும்பத்தை ஆதரிக்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்த அவர், வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், ஒரு வீட்டை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “நாங்கள் இன்னும் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறோம், மேலும் ஒரு சொந்த வீட்டைக் கட்ட விரும்புகிறோம். என் குழந்தைகளும் அதை விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் எனக்கு கிடைத்த இந்த பரிசுத்தொகையை ஒரு பெரிய ஆசீர்வாதம் என்று நான் நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இரண்டாம் பரிசு தொகை 1 மில்லியனில் இருந்து 5 மில்லியன் திர்ஹம் ஆக உயர்த்தப்பட்டது, இது பங்கேற்பாளர்களிடையே உற்சாகத்தை அதிகரித்தது. The Game LLC-யால் இயக்கப்படும் UAE லாட்டரி, 100 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசு வெற்றியாளர் மற்றும் நூற்றுக்கணக்கான பிற பரிசு வெற்றியாளர்களை அறிவித்த பிறகு, கடந்த நவம்பர் 2025 இல் அதன் முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
மற்றொரு அதிர்ஷ்டத்தில், கேரளாவைச் சேர்ந்த மற்றொரு நபரான பிரேமதாசன் மக்கலிக்கல் என்பவர், துபாய் டியூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிராவில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
துபாயில் இருக்கக்கூடிய டைப்பிங் சென்டரில் பணிபுரியும் 47 வயதான அவர், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 இல் வாங்கிய டிக்கெட் எண் 0277 உடன் மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 537 இல் வெற்றி பெற்றார். கடந்த 23 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அவர், 2008 முதல் பங்கேற்று வருகிறார். மேலும், டிக்கெட் விலையை இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு நண்பருடன் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவர், “இந்த வெற்றி எங்களுக்கு பெரிதும் உதவும்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், மில்லினியம் மில்லியனர் ப்ரோமோஷனில் 1 மில்லியன் டாலர் வென்ற 272வது இந்தியர் என்ற பெயரையும் பிரேமதாசன் பெற்றுள்ளார்.
இரண்டு வெற்றியாளர்களுக்கும், பரிசுத் தொகையானது, அவர்களுக்கான நீண்டகால குடும்பக் கனவுகளை நிறைவேற்ற கிடைத்த அதிர்ஷ்டமாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel