ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான முகமது பின் சயத் அல் நஹ்யான் அவர்கள் சொன்ன ஒரு வலிமையான அறிக்கை சமூக ஊடகங்கள் முழுவதும் வைரலாகப் பரவி, நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் மனதில் ஆழமாக எதிரொலித்துள்ளது.
ஈரானுடன் தொடர்புடைய தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்த பொதுமக்களை மார்ச் 7 அன்று அதிபர் ஷேக் முகமது பார்வையிடச் சென்ற போது, இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து அவர் வெளியிட்ட முதல் பொதுவான கருத்து இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது, ஷேக் முகமது தாக்குதல்களில் காயமடைந்த ஐந்து பொதுமக்களைச் சந்தித்தார். அவர்களில் இருவர் அமீரகத்தினர், ஒருவர் இந்தியர், ஒருவர் சூடானியர் மற்றும் ஒருவர் ஈரானியர் ஆவர். நேரடி ஒளிபரப்பில் பேசிய அமீரக அதிபர், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீள்திறன் (resilience) குறித்த ஒரு வலிமையான செய்தியின் மூலம் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.
“அமீரகம் ஈர்ப்பானது, அமீரகம் அழகானது, அமீரகம் ஒரு முன்மாதிரி. ஆனால் நான் அவர்களுக்குச் சொல்கிறேன்: ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாறாதீர்கள். ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தடித்த தோலும் கசப்பான சதையும் உண்டு; நாங்கள் எளிதில் வீழ்த்தக்கூடிய இரையல்ல (Our skin is thick and our flesh is bitter. we are no easy prey)” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வாக்கியம் இணையத்தில் விரைவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதிபரின் இந்த உறுதியான வார்த்தைகளும், அவர் பேசும்போது தனது விரலை உயர்த்திக்காட்டிய கம்பீரமான புகைப்படமும் சமூக ஊடகத் தளங்கள் முழுவதும் மிக வேகமாகப் பரவின.
இதன் எதிரொலியாக, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள பல வணிக நிறுவனங்களும் தனிநபர்களும், இந்த மேற்கோளையும் அவரது உருவப்படத்தையும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் அச்சிடத் தொடங்கியுள்ளனர். இவற்றில் SUV வாகனங்களின் பின்புறமும், மொபைல் கேஸ், காந்தம் கொண்ட வாலட் மற்றும் கையால் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகியவை அடங்கும்.
அமீரகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழில்முனைவோரும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை இணையத்தில் பகிர்ந்துகொண்டனர். அதிபரின் இந்தச் செய்தி எவ்வாறு தேசியப் பெருமை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக மாறியுள்ளது என்பதை அவர்கள் இதன் மூலம் வெளிப்படுத்தினர்.
ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வு குறித்த செய்தி
அதே மருத்துவமனைப் பயணத்தின் போது, ”இந்த மக்கள் அனைவரும் என் தோள்களில் சுமத்தப்பட்ட பொறுப்பு ஆவர்,” என்று தான் சந்தித்த காயமடைந்த பொதுமக்களைப் பற்றியும் ஷேக் முகமது பேசியது குடியிருப்பாளர்களை ஈர்த்தது.
மேலும், இந்த யுத்தத்தின் போது ஆற்றிய சிறப்பான சேவைக்காக அமீரகத்தின் ஆயுதப் படைகளை அவர் பாராட்டியதுடன், தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திய குடியிருப்பாளர்களைப் பெரிதும் மெச்சிக் கொண்டார்.
“சையத் பூமி” வலிமையுடனும், ஒற்றுமையுடனும் திகழ்வதுடன், தனது இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியுடன் நின்று, அதே வேளையில் எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்கும் என்று அதிபர் மீண்டும் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel