ஈரானின் தாக்குதல்கள் தொடர்பான தொடர்ச்சியான பதட்டங்களுக்கு மத்தியில், இணையத்தில் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பலரை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர், ஹமாத் சைஃப் அல் ஷம்சி, மார்ச் 15 அன்று, இது தொடர்பான வழக்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 நபர்களை கைது செய்ய உத்தரவிட்டு, அவர்களை விரைவு விசாரணைக்கு அனுப்ப பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. போலி வெடிப்புகள் (explosion) மற்றும் தாக்குதல்களைக் காட்டும் காட்சிகள் உட்பட, போலி மற்றும் ஜோடிக்கப்பட்ட வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்ததற்காக 10 பேரை காவலில் வைக்கப்பட்டதற்கு பிறகு இது நிகழ்ந்துள்ளது.
முன்னதாக ஒரு தனி வழக்கில், அபுதாபி காவல்துறை, நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களின் போது முக்கியமான இடங்களைப் படம்பிடித்து, அந்தக் காட்சிகளைத் தவறான தகவல்களுடன் இணையத்தில் வெளியிட்டதற்காக 45 பேரை கைது செய்தது.
மூன்று வகையான மீறல்கள்
இந்த வழக்குகளில் முக்கியமாக பின்வரும் மூன்று வகையான மீறல்கள் அடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்:
1. உண்மையான தாக்குதல் காட்சிகளைப் பகிர்தல்
சிலர் ஏவுகணை இடைமறிப்புகள் அல்லது அவற்றின் பின்விளைவுகள் குறித்த உண்மையான காணொளிகளைப் பதிவிட்டனர். இந்தக் காணொளிகளில் பெரும்பாலும், நிகழ்வுகளைப் பார்க்கும் கூட்டத்தினரோ அல்லது அச்சத்தையும் பீதியையும் உருவாக்கும் வகையிலான கூடுதல் வர்ணனைகளோ இடம்பெற்றிருந்தன. இவை பாதுகாப்பு அமைப்புகளைப் பாதிக்கக்கூடியதாகவும், விரோத சக்திகளால் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடியதாகவும் இருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2. போலி அல்லது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ
மற்றொரு குழு, AI மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவை என்று தவறாகக் கூறப்பட்ட பழைய வீடியோ உள்ளிட்ட புனையப்பட்ட தகவல்களை பகிர்ந்தது. இவற்றில், வெடிப்புகளின் போலிக் காட்சிகள், எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் உண்மையானவை போலத் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தவறான காட்சிகள் ஆகியவை அடங்கும்.
3. விரோதக் கருத்துக்களை ஊக்குவித்தல்
மூன்றாவது குழு ஒன்று, விரோத நாட்டையும் அதன் இராணுவ நடவடிக்கைகளையும் பாராட்டும் பதிவுகளைப் பகிர்ந்ததாகவும், நெருக்கடியான நேரத்தில் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளை சாதனைகளாக சித்தரிக்கும் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய பதிவுகள் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், ஒரு முக்கியமான பாதுகாப்பு சூழ்நிலையில் தவறாக வழிநடத்தும் விவாதத்துக்கு பங்களிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதிகாரிகளிடமிருந்து கடுமையான எச்சரிக்கைகள்
இந்த போர் நெருக்கடி தொடங்கியதிலிருந்தே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத் தரப்பு வழக்குரைஞர் அலுவலகம், சமூக ஊடகங்களில் வதந்திகள், பொய்ச் செய்திகள் அல்லது சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு எதிராகக் குடியிருப்பாளர்களை எச்சரித்தது.
தவறான உள்ளடக்கத்தை உருவாக்குவது மட்டுமல்ல, அதைப் பகிர்வது அல்லது மீண்டும் பதிவிடுவது கூட தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகச் சட்டத்தின்படி, பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அல்லது பீதியை ஏற்படுத்தும் தவறான தகவல்களைப் பரப்பினால், குறைந்தது ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 100,000 திர்ஹம்ஸ் முதல் அபராதம் விதிக்கப்படலாம்.
இதற்கிடையில், துபாய் காவல்துறை வதந்திகளையோ அல்லது அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு முரணான உள்ளடக்கத்தையோ வெளியிடுவது 200,000 திர்ஹம்களுக்குக் குறையாத அபராதம் விதிக்கப்படலாம் என்றும், சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் இத்தகைய சூழலில், சம்பவ தளங்களைப் படம்பிடிப்பதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர், இதுபோன்ற காட்சிகளைப் பகிர்வது பீதியை ஏற்படுத்தும் மற்றும் அவசரகால மீட்பு முயற்சிகளில் தலையிடக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
எனவே, எந்தவொரு வீடியோவையும் ஆன்லைனில் பகிர்வதற்கு முன்பு தகவல்களைச் சரிபார்க்குமாறு காவல்துறை குடியிருப்பாளர்களை வலியுறுத்தியது, குறிப்பாக AI போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் போலி உள்ளடக்கத்தை உண்மையானதாகக் காட்டக்கூடும் என்பதால் கவனமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அத்துடன் பொது பாதுகாப்பைப் பராமரிக்கவும், நெருக்கடியான சூழ்நிலைகளில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டும் நம்புவது அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel