கடந்த இரண்டு நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (புதன்கிழமை) மதியம் நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் துபாய் மற்றும் ஷார்ஜா முழுவதும் உள்ள மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே தஞ்சம் புகுந்தனர்.
முக்கியப் பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலைகளில் தெரிவுத்திறன் கடுமையாகக் குறைந்தது, இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஃபுஜைராவின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது. இதே போல் அபுதாபியின் அல் தஃப்ரா பகுதியிலும் ஆலங்கட்டி மழை பெய்ததாக அதேபோல், ஷார்ஜாவில் அடர்த்தியான மேகங்கள் ஒன்று திரண்டதால், பலத்த இடிச் சத்தங்கள் கேட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய மழை, மின்னல், பலத்த காற்று, புழுதிப் புயல், கொந்தளிப்பான கடல் மற்றும் குறைந்த பார்வைத் தெளிவு ஆகியவற்றுக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், துபாய் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள், குடியிருப்பாளர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அவசரத் தேவைகளுக்கு 999 என்ற எண்ணுக்கும், அவசரமற்ற தேவைகளுக்கு 901 என்ற எண்ணுக்கும் அழைப்பு விடுக்குமாறு குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அபுதாபியின் முக்கிய சாலைகளில் வேக வரம்புகளும் குறைக்கப்பட்டுள்ளன.
NCM வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி, இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம். இன்று 24–25°C வெப்பநிலையுடன் மழை பெய்ய 90% அதிக வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை லேசான மழையும், வெள்ளிக்கிழமை கனமழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் சனிக்கிழமைக்குள் வானிலை சீராக வாய்ப்புள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil WhatsApp Channel