ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், டெலிவரி ஊழியர்கள் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் மழையில் நனைந்தவாறே பயணிக்கும் பல்வேறு காட்சிகளை ஊடகங்களில் காணமுடிந்தது. இது, மோசமான வானிலையின்போது முன்களப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. வைரலான ஒரு வீடியோவில், தலாபத் நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் ஒருவர், பைக்கை நீர் தேங்கிய சாலைகளில் தள்ளிக்கொண்டு செல்வது காட்டப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், இதுபோன்ற சம்பவங்கள் வழக்கமான நடைமுறை அல்ல என்று அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்று தலாபத் நிறுவனம் கூறியதுடன், பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் டெலிவரி சேவைகள் நிறுத்தப்படும் என்றும், மோசமான வானிலையின்போது டெலிவரி ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், “எந்தவித பின்விளைவுகளும் இன்றி டெலிவரி ஊழியர்கள் எந்த நேரத்திலும் தங்கள் சேவையை நிறுத்திக்கொள்ளலாம்,” என்று அந்நிறுவனம் தெரிவித்ததுடன், நிகழ்நேர வானிலை நிலவரங்கள் மற்றும் கள நிலவரங்களின் அடிப்படையில் செயல்பாடுகள் தொடர்ந்து சரிசெய்யப்படுகின்றன என்பதையும் எடுத்துரைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட விநியோக சேவைகள்
மழையின் தாக்கம் அமீரகத்தின் பின்வரும் முக்கிய விநியோக செயலிகள் அனைத்திலும் தெளிவாகத் தெரிந்ததாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- தலபாத் செயலியில், குறைவான உணவகங்களே இருப்பதாகவும், தாமத எச்சரிக்கைகள் வருவதாகவும் காட்டப்பட்டுள்ளது.
- Deliveroo செயலி, டெலிவரிக்கான பகுதிகளைக் கட்டுப்படுத்தியதுடன், காத்திருப்பு நேரம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
- கரீம் செயலி, மோசமான சாலைகள் காரணமாக தாமதங்கள் ஏற்படும் எனச் சுட்டிக்காட்டியது.
- நூன் செயலி, சேவை இடைவெளிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதாகத் தெரிவித்தது.
- கீட்டா செயலி, பல பகுதிகளில் தனது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியதாக தெரிவித்துள்ளது.
மேற்கூறிய டெலிவரி நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைக் குறைத்ததால், பல எமிரேட்களில் உள்ள வாடிக்கையாளர்கள் குறைவான தேர்வுகள், நீண்ட விநியோக நேரங்கள் மற்றும் தற்காலிக சேவை நிறுத்தங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாட்டு மாற்றங்கள்
மோசமான வானிலையைக் கருத்தில்கொண்டு, டெலிவரி நிறுவனங்கள் பின்வரும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாண்டதாகத் தெரிவித்துள்ளன:
- பயணத் தூரத்தைக் குறைக்க விநியோகப் பகுதிகளைக் கட்டுப்படுத்துதல்.
- அதிக ஆபத்துள்ள அல்லது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சேவைகளை நிறுத்துதல்.
- செயலிகள் மூலம் தாமதங்கள் அல்லது மூடல்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்தல்.
- நிலைமைகள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், டெலிவரி ஊழியர்கள் வேலையை நிறுத்த அனுமதித்தல்.
அமீரகம் முழுவதும் பெய்த கனமழை, பலத்த காற்று மற்றும் குறைந்த பார்வைத் திறன் ஆகியவை பயணத்தை அபாயகரமானதாக மாற்றியதால், டெலிவரி ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான பரந்த முயற்சிகளை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன.
துபாய், அபுதாபி மற்றும் வடக்கு எமிரேட்ஸ் உள்ளிட்ட நகரங்களைப் பாதித்த, ஒரு வார கால நிலையற்ற வானிலைக்கு மத்தியில் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் குறைந்த பார்வைத் திறன் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், நீர் தேக்கத்தை நிர்வகிக்கவும், போக்குவரத்து ஓட்டத்தைப் பராமரிக்கவும் குழுக்களைப் பணியில் அமர்த்தியிருப்பதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு, குறிப்பாக வெளிப்புறப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வானிலை அமைப்பு படிப்படியாக அல் அய்ன் மற்றும் ஃபுஜைரா போன்ற பகுதிகளை நோக்கி கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும், இன்று பிற்பகலிலும் வார இறுதியிலும் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படிப்படியாக வானம் தெளிவடையும் சூழல் உருவாகி வந்தாலும், வரும் நாட்களில் ஆங்காங்கே மழைப்பொழிவுகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil WhatsApp Channel