ஈரானிலிருந்து இன்று (மார்ச் 27, 2026) ஏவப்பட்ட ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஒன்பது ட்ரோன்களையும் (UAVs) நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஈரானுடன் தொடர்புடைய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம் 378 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 15 குரூஸ் ஏவுகணைகளையும் மற்றும் 1,835 ட்ரோன்களையும் வெற்றிகரமாக இடைமறித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பினால் வெற்றிகரமாக ஏவுகணைகள் தடுக்கப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல்களால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஈரானின் தொடர் தாக்குதல்களால் அமீரக ஆயுதப் படை வீரர்கள் இரண்டு பேர் பணியில் இருந்தபோது கொல்லப்பட்டனர், அவர்களின் படைகளுடன் பணிபுரிந்த ஒரு மொராக்கோவைச் சேர்ந்த ஒரு குடிமகனும் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த எட்டு வெளிநாட்டினரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 171 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரான் இடைவிடாத தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்க முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்குத் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நிலவி வரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில், உயிர்களைப் பாதுகாப்பதற்கும் தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்கும் தாங்கள் உறுதியுடன் இருப்பதாக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel