ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதைத் தொடர்ந்து, அமீரகமானது தற்போதைய சவால்களைக் கடந்து மேலும் வலுப்பெறும் என்று X தளத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரானிலிருந்து ஏவப்பட்ட 2,300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொண்ட நிலையில், பிராந்திய பதட்டங்களுக்கு நாடு தொடர்ந்து பதிலளித்து வரும் வேளையில் அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்த அச்சுறுத்தல்களில் பெரும்பாலானவை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது அந்த பதிவில், போட்டித்தன்மை, நெகிழ்வுத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சி மாதிரியின் வலிமையை எடுத்துரைத்த ஷேக் முகமது, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் மீள்திறனையும் பாராட்டியுள்ளார்.
மேலும், பிராந்தியத்தில் சவால்கள் இருந்தபோதிலும் தேசிய சாதனைகளைப் பாதுகாக்கவும், சீரான முன்னேற்றத்தை உறுதி செய்யவும் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அளித்த உறுதிமொழியை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“நமது தேசிய நிறுவனங்கள் முழுத் திறனுடன் செயல்படுகின்றன, நமது பாதுகாப்புப் படைகள் மிக உயர்ந்த தொழில்முறைத் திறனுடன் பணியாற்றுகின்றன, மேலும் நமது தனியார் துறை பொறுப்புடன் முன்னேறி வருகிறது,” என்று பிரதமர் ஷேக் முகமது குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், ஆயுதப் படைகளின் உயர் பாதுகாப்புத் தயார்நிலையையும், நாடு முழுவதும் நிலவும் வலுவான ஒற்றுமை உணர்வையும் ஷேக் முகமது சுட்டிக்காட்டியுள்ளார். மேம்பட்ட உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம், முற்போக்கான சட்டங்கள் மற்றும் உயர்தர வாழ்க்கை உள்ளிட்ட நீண்டகால பலங்களால் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றி உந்தப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இருவருக்குமான விரிவான வளர்ச்சிக்கு நாடு உறுதிபூண்டுள்ளது என்றும், அதன் முன்னேற்றம் சீராகத் தொடர்கிறது என்றும் ஷேக் முகமது வெளிப்படுத்தியுள்ளார்.
விண்வெளி இலக்குகள்
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ந்து வரும் விண்வெளித் துறைக்கான புதிய ஐந்தாண்டு செயல்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஷேக் முகமது தெரிவித்துள்ளார்.
இதில் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இத்துறையின் தற்போதைய மதிப்பு 44 பில்லியன் திர்ஹம்களுக்கும் அதிகமாக உள்ளது என்று ஷேக் முகமது கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே 30 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது, ஒரு விண்வெளி வீரர் திட்டத்தை நிறுவியுள்ளது, மேலும் செவ்வாய் கிரகப் பயணத்தையும் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில், ஐந்து ஆண்டுகளுக்குள் உலகின் முதல் 10 விண்வெளி நாடுகளில் ஒன்றாகத் திகழும் நோக்கில், வெள்ளி மற்றும் சிறுகோள் மண்டலத்திற்கான ஒரு புதிய திட்டம் நடைபெற்று வருவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் கவனம்
கூடுதலாக, ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, பாரம்பரிய மற்றும் நவீன சுகாதார அணுகுமுறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு தேசிய ஒருங்கிணைந்த மருத்துவ உத்திக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
அதேசமயம், மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் தொடர்ச்சியான சர்வதேச கூட்டாண்மைகளுக்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஷேக் முகமது கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக இந்தக் கூட்டத்தின் போது, ஆற்றல், முதலீடு, பொருளாதாரம், இராஜதந்திரம் மற்றும் மனிதாபிமானப் பணிகள் போன்ற முக்கியத் துறைகள் சார்ந்த 120-க்கும் மேற்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறிய பிரதமர், நீண்டகால சர்வதேசக் கூட்டாண்மைகள் வாயிலாக, ஐக்கிய அரபு அமீரகம் தனது உலகளாவிய இருப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், “எமது அடிப்படைக் கொள்கைகள் மாறாது நிலைத்திருக்கின்றன; எமது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அசாதாரணச் சூழல்களுக்குப் பிறகு, நாம் இன்னும் அதிக வலிமையுடன் மீண்டு வருவோம்,” என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel