ADVERTISEMENT

குவைத்தில் மின் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தமிழர் ஒருவர் பரிதாபமாக பலி!!

Published: 30 Mar 2026, 4:18 PM |
Updated: 30 Mar 2026, 4:30 PM |
Posted By: Menaka

ஈரானுடன் தொடர்புடைய மோதல் காரணமாக மத்திய கிழக்கில் பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், குவைத்தில் உள்ள ஒரு மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இந்தியத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

ADVERTISEMENT

40 வயதான சந்தன செல்வம், ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஷுவைபா (Shuaiba) நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்த நிலையில், தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்நிலையில், அந்த மின் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள ஒரு சேவை மையக் கட்டிடத்தை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகவும், இதனால் அங்குள்ள உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று குறிப்பிட்ட குவைத் அதிகாரிகள், சம்பவ இடத்தை முழுமையாகப் பாதுகாக்க அவசரக்கால மற்றும் தொழில்நுட்பக் குழுக்களை உடனடியாக அங்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த தாக்குதலில் சிக்கிய சந்தன செல்வம் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, செல்வத்தின் மறைவுக்கு குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.

அந்நாட்டின் அதிகாரிகள் தேவையான நடைமுறைகளை மேற்கொள்வதில் உதவி வருவதுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

செல்வத்தின் உயிரிழப்புடன் சேர்த்து, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் பலியான இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

உள்கட்டமைப்புகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டபோதிலும், நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகச் சேவைகள் சீராகவே இயங்கி வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel