ஷார்ஜா அதிகாரிகள், ஏப்ரல் 1 அன்று தவறான தகவல்களைப் பகிர்வதற்கு எதிராக குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர். நகைச்சுவைகள் அல்லது குறும்புகள் செய்வதற்கு கூட வதந்திகளை பரப்பினால் கடுமையான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஷார்ஜா அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம், நகைச்சுவையாக இருந்தாலும் கூட சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்புவது அல்லது மறுபதிவு செய்வது சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பதோடு, பொதுப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று கூறியுள்ளது.
நகைச்சுவைகளுக்கும் சட்டம் பொருந்தும்
ஏப்ரல் முதல் தினம் பெரும்பாலும் வழக்கமாக ஒருவருக்கொருவர் கேலிகள் செய்துகொள்வது அல்லது நகைச்சுவையாகப் பேசுவது மற்றும் பாதிப்பில்லாத குறும்புகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும், தவறான அல்லது திசைதிருப்பும் தகவல்களைப் பரப்புவது ஐக்கிய அரபு அமீரகச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
2021-ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணை-சட்டம் எண். 31-இன் கீழ், போலிச் செய்திகளை வெளியிடுபவர்கள் குறைந்தது ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 100,000 திர்ஹாம் அபராதத்தை எதிர்கொள்வார்கள்.
இத்தகைய நகைச்சுவைகள் அதிக பார்வைகளைப் பெறவும், விரைவான புகழை அடையவும், இணையத்தில் வைரலாகவும் ஒரு எளிய வழியாகத் தோன்றினாலும், எதார்த்தம் முற்றிலும் மாறுபட்டது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தண்டனைகள்
1. தவறான வதந்திகளைப் பரப்புதல்
கூட்டாட்சி ஆணை-சட்டம் எண். 34, 2021 (சைபர் குற்றச் சட்டம்)-இன் கீழ், இணையத்தில் தவறான வதந்திகளை வெளியிடுபவர், மறுபதிவு செய்பவர் அல்லது மீண்டும் பரப்புபவர் எவருக்கும் குறைந்தபட்சம் 1 ஆண்டு சிறை மற்றும் குறைந்தபட்சம் 100,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
2. பொதுக் கருத்தைத் தூண்டுதல்
அரசுக்கோ அல்லது அதன் நிறுவனங்களில் ஒன்றுக்கோ எதிராகப் பொதுமக்களின் கருத்தைத் தூண்டக்கூடிய அல்லது கொந்தளிக்கச் செய்யக்கூடிய தவறான செய்திகளைப் பரப்பினால் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 100,000 திர்ஹாம் அபராதத்திற்கு வழிவகுக்கும். மேலும், இது ஒரு அதிகாரப்பூர்வ நிறுவனத்திற்கு எதிராகச் செய்யப்படுமாயின், தண்டனை அதிகரிக்கப்படும்; இவர்களுக்குக் குறைந்தது இரண்டு வருட சிறைத்தண்டனை மற்றும் 200,000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும்.
3. நெருக்கடிகள் அல்லது அவசர காலங்களில்
நெருக்கடிகள், அவசரநிலைகள் அல்லது பேரிடர் காலங்களில், தவறான தகவல்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால், அதற்கான தண்டனைகள் இன்னும் கடுமையாக்கப்படுகின்றன. 2021-ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணைச் சட்டம் எண் 34-இன் பிரிவு 52-இன் படி, பின்வரும் தண்டனைகள் விதிக்கப்படும்
- குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை
- குறைந்தபட்சம் 200,000 திர்ஹம்ஸ் அபராதம்
4. போர்க்கால வதந்திகள்
குற்றங்கள் மற்றும் தண்டனைகள் குறித்த 2021-ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணைச் சட்டம் எண் 31-இன் பிரிவு 175-இன் படி, போர்க்காலத்தின்போது, நாட்டின் தற்காப்புத் தயார்நிலைக்கோ, ஆயுதப்படையினரின் இராணுவ நடவடிக்கைகளுக்கோ ஊறு விளைவிக்கும் வகையிலோ அல்லது மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையிலோ வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்புவது மரண தண்டனை வரையிலான கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கக்கூடும்.
சட்டத்தைப் பற்றிய அறியாமை ஒரு சாக்குப்போக்கு அல்ல என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆகவே, சரிபார்க்கப்படாத தகவல்களை பதிவிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பு கவனமாகச் சிந்திக்குமாறு அவர்கள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தினர், மேலும் ஒரு “கேலி” கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel