துபாயில் பல மணி நேரமாக கதவுகள் பூட்டப்பட்ட வாகனத்திற்கு உள்ளே சிக்கி தவித்த நான்கு வயது சிறுமி ஒன்று உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து துபாய் போலீசார் நடத்திய விசாரணையில், காருக்குள் தனது நான்கு வயது மகள் இருப்பது தெரியாமல் காரை விட்டு சென்ற தந்தையின் அலட்சியத்தால் அச்சிறுமி வாகனத்திற்குள்ளேயே மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துபாய் காவல்துறையின் குற்றவியல் துறை இயக்குனர் கலோனல் மக்கி சல்மான் அகமது அவர்கள் இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் நடந்ததாக கூறியதாக அரபு செய்தித்தாள் அல் ரோயா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் “சிறுமியின் தந்தை ஷாப்பிங் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். வீட்டினை அடைந்தவுடன் தனது நான்கு குழந்தைகளிடமும் தனது காரில் இருந்து பொருட்களை வீட்டிற்கு கொண்டு வர உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பின்னர் சோர்வாக உணர்ந்த தந்தை அதன் பின்னர் நேராக படுக்கைக்குச் சென்றுள்ளார்” என அவர் விவரித்துள்ளார்.
மேலும் “இரண்டு மணி நேரம் கழித்து, நான்கு வயது குழந்தையை காணவில்லை என்பதை குடும்பத்தினர் உணர்ந்து அச்சிறுமியை குடும்ப உறுப்பினர்கள் தேடியுள்ளனர். அந்த சிறுமியின் தந்தை வாகனத்திற்கு சென்று பார்க்கும்போது, சிறுமி முன் இருக்கையில் அசைவில்லாமல் இருப்பதைக் கண்டிருக்கிறார். நான்கு மணிநேரமாக காருக்குள் மாட்டிக்கொண்ட சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கலோனல் அஹமது அனைத்து பெற்றோர்களையும் எப்போதும் தங்கள் குழந்தைகளின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்றும், எந்தவொரு காரணத்திற்காகவும் குறிப்பாக கோடை காலங்களில் அவர்களை வாகனத்திற்குள் தனியாக விட்டுச்செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அமீரகத்தில் இதற்கு முன்னரும் இது போன்று காருக்குள் தனியாக விட்டுச்செல்லப்பட்ட சிறு குழந்தைகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்களை தொடர்ந்து காவல்துறையினர் பொதுமக்களை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.