மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு!!

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்பொழுது உலகம் முழுவதும் 80,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கொரோனா வைரஸின் பாதிப்பால் பல நாடுகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் 100 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரான்
மத்திய கிழக்கு நாடுகளிலேயே ஈரானில் வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிகாரப்பூர்வமாக 61 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் அந்நாட்டின் எம்.பி ஒருவர் இதை பற்றிக் கூறுகையில் குறைந்தது 50 பேராவது இந்த நோயினால் இறந்திருக்கலாம் என்று அறிவித்துள்ளார். மேலும் பதிவாகியதை விட கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
யுஏஇ
அமீரகத்தில் இது வரை 13 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
குவைத்
குவைத்தில் இது வரை 8 பேர் வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இதில் 5 பேர் ஈரானிலிருந்து விமானத்தில் வந்த பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஹ்ரைன்
பஹ்ரைனில் இதுவரை 8 பேர் வைரஸால் பாதிப்படைந்துள்ள நிலையில் துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து பஹ்ரைனுக்கு வரும் விமானங்களை 48 மணிநேரத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது.
ஈராக்
ஈராக்கில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடித்ததைத் தொடர்ந்து சீனா, ஈரான்,தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் சிங்கப்பூரில் இருந்து பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஓமன்,எகிப்து,லெபனான்
ஓமனில் இதுவரை 3 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் எகிப்தில் ஒருவருக்கும் லெபனானில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.