ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம், துபாய் மற்றும் ஷார்ஜா முழுவதும் அவசர கால எச்சரிக்கை செய்தியை குடியிருப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டதாவது: “தற்போதைய சூழ்நிலை மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் காரணமாக, உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சம் புகுங்கள். ஜன்னல்கள், கதவுகள் மற்றும் திறந்த பகுதிகளை விட்டு விலகி இருங்கள். கூடுதல் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருங்கள்” என கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தொடங்கிய நிலையில் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் ஈரான் பதில் தாக்குதலை நடத்தியது. பின்னர் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பின் அது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இன்று அமீரகத்தை சேர்ந்த அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Adnoc நிறுவனத்தின் எண்ணெய் டேங்கர் மீது ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனை வன்மையாக கண்டிப்பதாக அமீரகம் தெரிவித்த நிலையில் தற்பொழுது துபாய் மட்டும் ஷார்ஜா எமிரேட்களில் தாக்குதலுக்கான எச்சரிக்கை செய்தி கிடைக்கப்பெற்றது.
இதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே நிலைமை தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் தங்கள் இயல்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, குடியிருப்பாளர்களுக்கு நிலைமை பாதுகாப்பாக இருப்பதாகவும் தினசரி நடவடிக்கைகளை குடியிருப்பாளர்கள் தொடரலாம் எனவும் செய்தி விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9 அன்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அவசரகால எச்சரிக்கை அமைப்பு ஒலிப்பது இதுவே முதல் முறையாகும்.