சவூதி அரேபியாவில் உம்ரா செய்ய வருபவர்களுக்கு தற்காலிக தடை!!
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், சவூதி அரேபியாவிற்கு உம்ரா செய்ய வருபவர்களுக்கு சவூதி அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இந்த தற்காலிகத் தடையானது கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா வாசிகளுக்கும் பொருந்தும் என சுகாதார ஆணையம் அறிவித்துள்ளதாக சவூதி பத்திரிக்கை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சவுதி மற்றும் ஜி.சி.சி(GCC) குடிமக்கள், தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி நாட்டிற்கு உள்நுழையவும் வெளியேறவும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. விதிவிலக்காக, தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளிநாட்டிற்குச் சென்ற சவூதி குடிமக்கள் மற்றும் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப விரும்பும் ஜி.சி.சி(GCC) குடிமக்கள், தங்களுடைய அடையாள அட்டையைப் பயன்படுத்தி தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை மூலம் வருபவர்களின் முக்கிய நிபந்தனைகளாக, “நுழைவு இடங்களிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவர்கள் அங்கு வருவதற்கு முன்பு எந்த நாடுகளில் இருந்து பயணிகள் வந்தார்கள் என்பதை சரிபார்க்கவும், அந்த நாடுகளில் இருந்து வருபவர்களை சமாளிக்கத் தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் செய்வார்கள்” என்று SPA அறிக்கை கூறியுள்ளது.
மேலும் சவுதி அதிகாரிகள், குடிமக்களை கொரோனா வைரஸ் பரவும் நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வைரஸ் வேகமாகப் பரவுவதை ஒட்டி சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் அனைத்து சர்வதேச நடவடிக்கைகளுக்கும் சவூதி அரசு தனது ஆதரவை அளிப்பதாகக் கூறியுள்ளது. இது வரையிலும் மத்திய கிழக்கு நாடுகளில் 200 க்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.