துபாய் சுகாதாரத் துறையின் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன் முதலாக துபாயில் உயிருள்ள நன்கொடையாளரிடம் இருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துபாய் சுகாதாரத்துறையின் மூலம் (DHA) மேற்கொள்ளப்பட்டுள்ளது. துபாய் மருத்துவமனையின் (Dubai Hospital) அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, பிப்ரவரி 10 ம் தேதி இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். 24 வயது வழக்கறிஞரான ஆயிஷா வலீத் மர்ஸூக் தனது இடது சிறுநீரகத்தை தன் உடன் பிறந்த சகோதரரான டையலிஸிஸால் பாதிக்கப்பட்ட காலித் வலீத் மர்ஸூக்கிற்கு வழங்கியுள்ளார்.
தலைமை சிறுநீரக மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான Dr யாசீர் அஹமத் அல் சயீதி தலைமையில் 25 பேர் அடங்கிய அறுவை சிகிச்சை குழுவால் துபாய் மருத்துவமனையில் நன்கொடையாளரிடமிருந்து சிறுநீரகம் பிரித்தெடுக்கப்பட்டது.
உறுப்பு மாற்றும் பக்கத்தில், பொது அறுவை சிகிச்சை ஆலோசகர் மற்றும் டிஹெச்ஏவில் (DHA) உள்ள உறுப்பு மாற்றுக் குழுவின் தலைவரும், உடின் பல்கலைக்கழக (Udine University) அறுவை சிகிச்சை பேராசிரியருமான டாக்டர் ஆண்ட்ரியா ரிசைல்டி மற்றும் பொது அறுவை சிகிச்சை ஆலோசகரும் துபாய் மருத்துவமனையின் பேரியாட்ரிக் பிரிவின் தலைவருமான டாக்டர் ஜைத் அப்துல் அஜீஸ் மற்றும் அவரது குழு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் சிறுநீரகம் செயல்படத் தொடங்கியதால் அறுவை சிகிச்சையானது வெற்றியடைந்தது. தற்பொழுது தாங்கள் இருவரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாக அண்ணன், தங்கை இருவரும் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, துபாய் மருத்துவமனையில் ஒரு உயர்தர உறுப்பு மாற்று மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது பற்றி ஆயிஷா கூறியதாவது :
“எனது சகோதரர் 2016 ம் ஆண்டு முதல் டயாலிசிஸ் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டார். எனது சகோதரரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக எனது சிறுநீரகத்தை தானம் செய்ய முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டாக்டர் யாசிர் மற்றும் டாக்டர் ஆண்ட்ரியா ஆகியோருக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அவர்கள் எனக்கு அறுவை சிகிச்சைக்கு முன் முறையான விளக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்தது எனக்கு எளிதாக இருந்ததது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, என் சகோதரருக்கு சிறுநீரகம் நன்றாக செயல்படுவதால் நான் இப்போது மகிழ்ச்சியடைகிறேன்”.
காலித் கூறியதாவது :
“எனது உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டிருந்தது, நான் விரைவாக சோர்வடைந்து கொண்டிருந்தேன், என்னால் அதிகம் நடக்க முடியவில்லை.ஆனால் இப்போது என் மனம் மற்றும் உடல் முன்பை விட ஆரோக்கியமாக இருப்பதாக நான் உணர்கிறேன். இதற்கு காரணமான என் தங்கைக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்”.