புதியதாக திறக்கப்பட்ட ஜபெல் ஹஃபீத் பாலைவனப் பூங்கா!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான “ஜபெல் ஹஃபீத்” அபுதாபியில் இருக்கும் அல் அய்ன் நகரில் அமைந்துள்ளது. பொதுவாக குளிர்காலங்களின் இரவு நேரங்களில் இந்த மலையின் உச்சிக்கு சென்று பொழுதைக் கழிக்க அமீரகவாசிகள் பெரிதும் விரும்புவர். இந்த மலைக்கு அருகிலேயே அல் அய்ன் மிருகக்காட்சி சாலையும் முபாஸரா பூங்காவும் இருக்கின்றது.
தற்பொழுது மேலும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பாலைவனப் பூங்கா, ஜபெல் ஹஃபீத் மலையின் அடிவாரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மலையின் கிழக்கு பகுதியில் அல் அய்னிற்கு தெற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள ஜபெல் ஹஃபீத் பாலைவனப் பூங்கா, அபுதாபியின் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறையால் (DCT) தொடங்கப்பட்டுள்ளது.
அபுதாபியின் செயற்குழு உறுப்பினரும் அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவருமான மாண்புமிகு சேக் காலித் பின் முஹம்மது பின் சையத் அல் நஹ்யான் இப்பூங்காவைத் திறந்து வைத்தார்.
அமீரகத்தில் முதல் முறையாக யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத்தை வெளிக்காட்டும் இடமாக இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5000 ஆண்டுகளுக்கும் மேலான தொல்பொருள் கண்டுபிடிப்புகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இப்பூங்காவில் மக்களை ஈர்க்கும் வண்ணம் பைக் சவாரி, வழிகாட்டுதலுடன் கூடிய ஹைக்கிங், கேம்பிங், குதிரை சவாரி மற்றும் பல வசதிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவானது மற்ற பூங்காக்களை போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் மக்களைக் கவரும் வண்ணம் உள்ளது. இயற்கை விரும்பிகளுக்கு இந்த பூங்காவானது ஒரு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.