மத்திய கிழக்கு நாடுகளில் முதல் முறையாக துபாயில் பேருந்துகளின் லைவ் அப்டேட்!!!
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (Roads and Transport Authority) தற்பொழுது துபாய் பேருந்துகளின் நிகழ்கால புதுப்பிப்புகளை (Live Update) கூகிள் மேப்பில் இயக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கு முன்பாக கூகிள் மேப்ஸில், நிலையான ஆர்டிஏ (RTA) பேருந்து கால அட்டவணையை மட்டுமே காண முடியும். தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையின் மூலம் பயணிகள் தங்களது பேருந்துகளின் லைவ் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் பேருந்துகளின் காலதாமதம் மற்றும் பேருந்துகளின் நிகழ்கால இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.
இதன் மூலம் உலகிலுள்ள 100 ஸ்மார்ட் நகரங்களுக்கு இணையாக, பொது போக்குவரத்தில் திறந்த தகவலை (Open Data) பயன்படுத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நகரமாக துபாய் விளங்குகிறது.
போக்குவரத்து அமைப்புகளின் இயக்குனர் கலீத் அல் அவாடி இது பற்றி கூறுகையில், “பேருந்துகளின் கால அட்டவணையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிவதால் இது பொது போக்குவரத்து பயணிகளுக்கு மிக உதவிகரமாக இருக்கும். மேலும் எதிர்பாராமல் நிகழும் காலதாமதம் அல்லது சரியான நேரத்திற்கு முன்பே வந்தடையும் பேருந்துகளைப் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்வதால் பயணிகள் அதற்கேற்றவாறு தங்களின் பயணத்திட்டங்களை செயல்படுத்தவும், பேருந்துகளின் கால அட்டவணையில் ஏற்படும் மாற்றங்களுக்காக கொடுக்கப்படும் புகார்களைக் குறைக்கவும் உதவும்” என்று கூறியுள்ளார்.