கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி – டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி ரத்து???

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால், உலகின் பல நாடுகளின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நாளுக்கு நாள் அதிவேகத்தில் பரவும் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உலக சுகாதார ஆணையம் (WHO) திணறிக் கொண்டிருக்கின்றது. உலகம் முழுவதும் 80,000 க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து வைரஸின் பாதிப்பு அதிகரிக்குமேயானால், இந்த வருடம் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு(International Olympic Committee) தெரிவித்துள்ளது.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், உலகின் பல நாடுகளில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று பதக்கம் வெல்வதே பல விளையாட்டு வீரர்களின் இலட்சியமாக இருக்கும்.
இறுதியாக, 2016 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து இந்த வருடம் ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியானது கொரோனா வைரஸின் தாக்கத்தால் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது.
கொரானா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாதபட்சத்தில், ஜூலை மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மூத்த உறுப்பினர் டிக் பவுன்ட் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இந்த வருட ஒலிம்பிக் போட்டிக்காக 9 ஆயிரம் கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதால் ஒலிம்பிக் போட்டியை வேறு நாட்டிற்கு மாற்றவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உலக வரலாற்றிலேயே இதுவரை முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் காலக்கட்டங்களில் மட்டுமே ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டது. முதல் முறையாக, சுகாதார அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும் சீனாவில் இருந்து வரும் வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்பட்டு வருகின்றது.
இந்த வருட ஒலிம்பிக்கில் பங்கு பெற இந்திய உட்பட பல நாடுகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கனவு நிறைவேறுவது கொரோனா வைரஸைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதைப் பொறுத்து இருக்கின்றது. வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வந்து இந்த வருட ஒலிம்பிக் போட்டியை நடத்த இயலுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.