கொரோனா வைரஸ் : தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு..!!!
உலகம் முழுவதும் மக்கள் கொரோனா வைரஸால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்வதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி பல சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே மழலையர் பள்ளிகளுக்கும், தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்த வேளையில், தற்பொழுது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த மாதம் இறுதி வரை விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இருந்தாலும், 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், பொதுத்தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், நீச்சல்குளங்கள், பூங்காக்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மார்ச் 31 ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடுகள், அரசியல் கூட்டங்கள் போன்ற எந்த நிகழ்வுகளும் நடக்கக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், விடுமுறை அளித்ததினால் யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது