இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு!!
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 43 பேராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை மூவாயிரத்து மூன்று பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா மருத்துவப் பரிசோதனையில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று டெல்லி, கேரளா, ஜம்மு , உத்திரபிரதேசம் ஆகிய இடங்களில் புதிதாக கொரோனா பாதிப்புடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கேரளாவில் மூன்று வயது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ததைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைக்கும் நோய் பாதிப்புடைய பெற்றோர் இருவருக்கும் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விபரம்
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த இத்தாலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவர் அங்கு ஓட்டுநராக பணி புரிந்தவர் ஆவார்.
உத்திரபிரதேசத்தில் மொத்தம் 8 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 9 பேரும் டெல்லியில் 3 பேரும் லடாக்கில் இரண்டு பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம், தெலுங்கானா, ஜம்மு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். பாதிக்கப்பட்டவர்களில் கேரளாவை சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது