கொரோனா வைரஸ் : உலகளவில் ஒரு இலட்சத்தை தாண்டியது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை..!! அச்சத்தில் உலகநாடுகள்!!
உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா எனும் கொடிய நோய். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் பகுதியில் சென்ற ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸானது தற்பொழுது உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் தன்னுடைய கொடிய தாக்கத்தை இன்றுவரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதற்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால், ஒவ்வொரு நாளும் இந்த வைரஸால் பாதிப்படைப்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாய் இருக்கும் கொரோனாவால் உலகெங்கிலும் இதுவரை 1,00,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் அதிவேகப் பரவுதலையொட்டி, உலக சுகாதார நிறுவனம் (WHO) உலக நாடுகள் அனைத்திற்கும் அவசரகால நிலையை அறிவுறுத்தியுள்ளது.
பல நாடுகளில் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், நாளுக்கு நாள் இந்த வைரஸானது மக்களிடையே அதிவேகத்தில் பரவிக் கொண்டே இருக்கிறது. இந்த வைரஸ் தோன்றிய நாடான சீனாவிலேயே அதிக நோய் பாதிப்புகளும் இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி நாடானது கொரோனாவால் அதிக மனித இழப்புகளை சந்தித்துள்ளது. உலகளவில் சீனா, ஈரான், இத்தாலி, தென் கொரியா,ஜப்பான் போன்ற நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் இன்று மட்டுமே 143 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் ஈரானில் 1,234 பேரும் தென்கொரியாவில் 505 பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இத்தாலி நாட்டிலிருந்தே மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதாகக் கூறப்படுகிறது. இதுவரை இத்தாலியில் 148 பேர் இறந்துள்ளனர். கொரோனாவின் பாதிப்பால் இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
வாடிகன், செர்பியா, பூட்டான் போன்ற நாடுகள் அந்நாட்டின் முதலாவது கொரோனா வைரஸின் நோய்த்தொற்று வழக்கை இன்று பதிவு செய்துள்ளன. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, லெபனான், பெல்ஜியம் போன்ற பல நாடுகளிலும் கொரோனா வைரஸால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அதே போல், அமெரிக்காவில் இதுவரை 12 பேர் இந்நோயால் இறந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் ஆவார்கள். அண்டை நாடான பாகிஸ்தானிலும் இதுவரை 6 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளைகுடா நாடுகளான குவைத், ஓமான், பஹ்ரைன், யுஏஇ, சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் பரவியிருக்கிறது. சவுதி அரேபியாவில் கொரோனாவின் பாதிப்பால் முஸ்லிம்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான உம்ரா எனும் இறைவணக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல் அமீரகத்திலும் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் அனைத்து பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு மாதம் விடுமுறை அளித்துள்ளது.
மேலும், கொரோனாவின் தாக்கத்தையொட்டி பல நாடுகளில் நடைபெற இருந்த விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் நிறுத்தியோ அல்லது ஒத்தி வைக்கப்பட்டோ வருகின்றன. பார்சிலோனாவில் நடக்க இருந்த மொபைல் போன் ஷோ, லண்டனில் நடக்க இருந்த லண்டன் புக் ஃபேர் , ஜெனீவாவில் நடக்க இருந்த இன்டர்நேஷனல் ஆட்டோ மோட்டார் ஷோ, அபுதாபியில் நடக்க இருந்த அல்ட்ரா மியூசிக் ஃபெஸ்டிவல் போன்ற பல நிகழ்ச்சிகள் இதிலடங்கும்.
இந்த கொடிய நோயை விட்டும் உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்க, கூடிய விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளில் மீண்டும் அமைதி நிலவ அனைவருடன் சேர்ந்து நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.