இந்தியாவில் அதிதீவிரமாகப் பரவும் கொரோனா..!!! 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…!!!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில், கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதித்து அவர்களும் குணமடைந்திருந்த வேளையில், கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிவேகமாகப் பரவிவருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கர்நாடகா, டெல்லி, மகாராஷ்ட்ரா,குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களை சேர்ந்த 7 பேர் கொரோனா பாதித்து இறந்த வேளையில், நேற்றும் இரண்டு பேர் கொரோனா பாதித்து உயிரிழந்தனர். இவர்கள் இமாச்சலப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், தற்பொழுது மேலும் ஒருவர் இந்தியாவில் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 65 வயது நபருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வேளையில் இன்று சிகிச்சை பலனின்றி மும்பையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதன் மூலம், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக, மகாராஷ்ராவில் இதுவரை 101 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் இடையேயான போக்குவரத்தும் நிறுத்தப்படும் என்றும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.