அமீரகத்தில் கொரோனா வைரஸிற்கு முதல் பலி…!!! இரண்டு பேர் உயிரிழப்பு…!!!

ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் முதல் முறையாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் ஒருவர், ஐரோப்பாவிலிருந்து வந்த 78 வயதான அரபு நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்பொழுது மாரடைப்பால் இறந்துள்ளார். மற்றொருவர் 58 வயதான ஆசிய வெளிநாட்டவர். இவர் இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர் ஆவார்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸால், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவாக குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் இருவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இந்த நோய் குறித்த கிடைக்கக்கூடிய ஆய்வுகளின்படி, இறப்பு விகிதம் 3.6 சதவீதத்தை எட்டக்கூடும் என்றும் மேலும் முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களே அதிகம் உயிரிழக்கிறார்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது வரை கொரோனாவிற்கு அமீரகத்தில் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.