இந்தியா : இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு..!!! பிரதமர் அறிவிப்பு..!!!
இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து இன்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர், பொதுமக்கள் சமூக இடைவெளி (social distance) தவிர்க்காது கடைபிடிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நாட்டு மக்கள் முறையாகக் கடைபிடித்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் என்ன வேண்டாம் எனவும் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனாவைத் தடுக்க சமூக இடைவெளியே சிறந்த வழி என்றும், ஊரடங்கின் போது நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்தாலும், நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் தவிர மற்ற அனைவரும் ஊரடங்கின் போது வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
கூடுதலாக, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மருத்துவர்கள் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் பொதுமக்கள் உபயோகிக்க வேண்டாம் என்றும் பிரதமர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.