தமிழக செய்திகள்

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவு : அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

திராவிட முனேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் குன்றி வீட்டிலேயே கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தார்.  அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் 97 வயதான பேராசிரியர் க.அன்பழகன் சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலையில் காலமானார். அவரது உடல் கீழ்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, கட்சியினர், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் வந்து அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினரிடம் தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

மேலும், பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவிற்கு தி.மு.க சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!