துபாயில் உணவகங்கள் அனைத்தும் இன்று முதல் மூடல்..!! துபாய் முனிசிபாலிடி அறிவிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாயில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக துபாயில் உள்ள அனைத்து உணவகங்களையும் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் முனிசிபாலிடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரெஸ்டாரண்ட், கஃபே (cafe) மற்றும் பிற உணவு சேவைகளை திங்கள்கிழமை (இன்று) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடுவதாக தெரிவித்துள்ளது.
As part of preventive measures, all restaurants, cafes, cafeterias, coffee shops and food service establishments across Dubai will be closed for two weeks starting from today Monday 23 March, 2020. pic.twitter.com/agkeWAX4KC
— Dubai Media Office (@DXBMediaOffice) March 23, 2020
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் ஹோம் டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஹோம் டெலிவரி செய்யும் பட்சத்தில் தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹோட்டல்கள் மற்றும் ஹோட்டல் அபார்ட்மெண்ட்களில், அங்கு தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு மட்டும் அந்தந்த ஹோட்டல்களில் இயங்கும் ரெஸ்டாரண்ட் மற்றும் கஃபேக்களுக்கு சென்று உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரே, அவசரநிலை, வேலை, மளிகைப் பொருட்கள் அல்லது மருந்துகளை வாங்குதல் போன்ற காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அவசரநிலைகளைத் தவிர்த்து மருத்துவமனைகள் அல்லது மருத்துவ கிளினிக்குகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாகனங்களில் பயணிப்பவர்கள் தங்கள் கார்களில் மூன்று நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.