இனி இந்தியாவில் விமானத்திலும் வைஃபை வசதி பெறலாம் : மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் இப்போது விமானத்தில் பயணிக்கும்போது வைஃபை வசதியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
விமானப் பயணத்திற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம், இந்தியாவில் இயங்கும் விமானங்களில், பயணிகளுக்கு இணைய சேவையை வழங்க மத்திய அரசாங்கம் அனுமதி அளித்தது. விமானியின் பொறுப்பில் உள்ளவரின் அனுமதி பெற்று வைஃபை வசதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் போதுமான வெளிச்சமில்லாத சூழலில் செல்லும் போது வைஃபை வசதியை பயன்படுத்த முடியாது என்றும் விரைவில் அனைத்து விமானங்களிலும் இந்த வசதி அமலுக்கு வரம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மடிக்கணினி, ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், ஈ-ரீடர் அல்லது பி.ஓ.எஸ் சாதனம் ஆகியவற்றுக்கு வைஃபை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஃபிளைட் மோடில் வைத்துதான் இந்த வசதியை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரியில், டாடா குழுமத்தின் நெல்கோ (NELCO), பானாசோனிக் ஏவியோனிக்ஸ் (Panasonic Avionics) உடன் இணைந்து இந்தியாவில் விமானத்தில் வைஃபை சேவைகளை அறிமுகப்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை எவரெட்டில் (Everett) தனது முதல் போயிங் 787-9 விமானத்தை டெலிவரி செய்யும் போது, விஸ்டாரா தலைமை நிர்வாக அதிகாரி லெஸ்லி தங், இந்த வசதியைப் பயன்படுத்தி விமானத்தில் வைஃபை சேவைகளை வழங்கும் இந்தியாவின் முதல் விமானம் இது என்று கூறியிருந்தார்.
உலகளவில், பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே பயணிகளுக்கு வைஃபை வழங்கி வருகின்றன. ஆனால் அவை இந்திய வான்வெளியில் நுழையும்போது அந்த வசதியை பயன்படுத்த கூடாது. ஏர் ஏசியா, ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், எகிப்து ஏர், எமிரேட்ஸ், ஏர் நியூசிலாந்து, மலேசியா ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் ஆகிய விமான நிறுவனங்கள் ஏற்கனவே விமானங்களில் பயணிகளுக்கான இன்டர்நெட் பயன்பாட்டை அனுமதிக்கும் 30 விமான நிறுவனங்களில் அடங்கும். தற்பொழுது இந்தியாவிலும் இது நடைமுறைக்கு வந்தது விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது.