சவூதி அரேபியாவில் முதல் கொரோனா வைரஸ் : சவூதி அமைச்சகம் அறிவிப்பு!!

உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சவூதி அரேபியாவில் இன்று, முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டிருக்கும் சவூதி நாட்டைச் சேர்ந்த அவர், ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக சவூதி வந்ததாக அறியப்படுகிறது.
சவூதி அமைச்சகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர், சவூதி அரேபியாவிற்குள் நுழைந்தபோது, தான் ஈரானிலிருந்து வந்திருக்கும் தகவலை வெளியிடவில்லை என்று கூறியுள்ளது.
சீனாவிற்கு அடுத்தபடியாக, ஈரான் கொரோனா வைரஸால் அதிக பாதிப்படைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஈரானில் இருந்து வந்தவர்களாகவே அறியப்படுகிறார்கள்.
வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்த நபருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தனது நாட்டிற்கு வராமல் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.