கொரோனா வைரஸ் : சவுதி அரேபியாவில் அனைத்து நாடுகளுக்கும் விமான சேவை ரத்து..!! பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்வு!!
சவுதி அரேபியா கொரோனா வைரஸின் பாதிப்பையொட்டி ஏற்கெனவே இந்தியா, இலங்கை போன்ற 39 நாடுகளுக்குண்டான விமான சேவைகளை ரத்து செய்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது சவுதி அரசாங்கம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் உண்டான விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது.
இந்தத் தடை இரு வாரங்களுக்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விமானங்கள் இடைநிறுத்தப்பட்டதால் நாட்டிற்கு திரும்பி வரமுடியாத குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அல்லது சவுதி அரேபியாவிற்கு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும் மக்களுக்கு இது ஒரு அதிகாரப்பூர்வ விடுமுறையாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அங்கு புதிதாக 24 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.